குளிர்காலத்தில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகள் மன ஆரோக்கியத்தை பாதித்து, மனச்சோர்வை உண்டாக்கும். கடும் குளிரும் பனியும் நிலவும் மார்கழி, தை மாதங்களில் இது அதிகரிக்கக்கூடும். மனச்சோர்வு உண்டாவதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
குளிர்காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகள்: குளிர் காலத்தில் குறுகிய பகல் நேரங்கள், நீண்ட இரவுகள் என்று நிலவும் காலநிலை மாறுபாடு இயல்பாகவே உடல் இயக்கத்தை குறைத்து, எதிலும் ஆர்வம் இன்மையை உண்டாக்குகிறது. நிறைய உண்ண வேண்டும் போன்ற உணர்வு, இதனால் கூடும் உடல் எடை, விரைவிலேயே உடல் களைத்து போதல், அடிக்கடி கோபம், எரிச்சல் தோன்றுதல், தலைவலி அதிகரித்தல், கை கால்கள் கனமாக இருப்பது போன்ற உணர்வு, நீண்ட நேரம் தூங்குதல் போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் தோன்றும். இது பொதுவாக இள வயதினரை அவ்வளவாக பாதிப்பதில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது.
மன ரீதியான பாதிப்புகள்: சொல்லத் தெரியாத கவலை, மனதை அழுத்தும் பாரம், ஆற்றல் இன்மை, நம்பிக்கை இன்மை, செயல்களில் ஈடுபாடு இன்மை, பிறரிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது, மிகுந்த கவலையில் இருப்பவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் கூட தோன்றலாம்.
மனச்சோர்வுக்கான காரணங்கள்: குளிர்காலத்தில் சூரிய ஒளி மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் வைட்டமின் டி குறைபாடும் ஏற்படுகிறது.
நம் மனமகிழ்ச்சிக்கு காரணமான செரட்டோனின் என்கிற ரசாயனம், நமது உடலில் சுரப்பது குறைகிறது. எனவே மகிழ்ச்சி மனநிலை குறைகிறது .சூரிய ஒளி குறைவாக கிடைப்பதால் மனச்சோர்வும் வந்து சேர்கிறது.
மெலடோனின் என்கிற ரசாயனம் தூக்கத்திற்கு வழிவகுக்கும். சூரிய ஒளி குறைவாக கிடைப்பதால் மெலடோனின் உற்பத்தி அதிகரித்து பகல் நேரங்களில் எப்போதும் சோர்வாகவும் சோம்பலாகவும், தூக்கம் வருவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும். இருள் சூழ்ந்து விடும்போது நமது உடல் தன்னாலேயே மெலடோனின் என்ற ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது.
குளிர்கால மனச்சோர்வுக்கான தீர்வுகள்:
1. வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்காமல் திறந்து வைத்து வெளிச்சத்தை உள்ளே வர அனுமதிப்பது. முடிந்த அளவு பகல் நேரத்தில் சூரிய ஒளியில் இருப்பது நல்ல ஒரு மாறுதலைத் தரும்.
2. பகலில் வீட்டில் இருப்பவர்கள் தோட்ட வேலை செய்வது, செடி நடுவது போன்ற வேலைகளை செய்யலாம். நண்பர்களுடனும் பிற மனிதர்களுடனும் கலந்து பழகுவது, அக்கம்பக்கம் வீட்டினருடன் கலந்து ஏதாவது விளையாட்டுகள், கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
3. அதிகமாக வீட்டிற்குள்ளேயே அமர்ந்து செல்போனையும் டிவியும் பார்த்துக் கொண்டிருக்காமல், கோயிலுக்கு செல்வது மற்றும் சமூக சேவை செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.
4. தொடர்ந்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்வது மிகவும் அவசியம். இது மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உடற்பயிற்சியின்போதும் அதற்குப் பின்னரும் மன அழுத்தத்தைக் குறைத்து, சந்தோஷமான மனநிலையை அதிகரிக்கும் எண்டோர்பின்களை உடல் வெளியிடுகிறது. அத்துடன் உடலை சூடாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
5. நல்ல சத்தான சமச்சீர் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். புரோட்டீன் நிறைந்த உணவு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் செரோடோனின், டோபமைன் மற்றும் டைரோசின் ஆகியவற்றை அதிகரிக்கின்றன. இது உடலை சுறுசுறுப்பாகவும், மனதை அமைதியாகவும் வைக்கிறது. மேலும், தினசரி பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, மேலும் மூளை செல்களின் கட்டமைப்பை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது.
6. ஆழ்ந்து உறங்குவது, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நம்மை நலமாக வைக்கும். குளிர்காலத்தில் தாமதமாக தூங்குவது மூளை மற்றும் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இரவில் நன்றாக தூங்குவதற்கு கேஜெட்கள் பயன்பாடு மற்றும் மசாலா நிறைந்த கனமான உணவுகளை தவிர்க்கவும்.
7. போதை மற்றும் குடிப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். இது மனச்சோர்வை மிகவும் அதிகமாக்கும்.
8. சிறிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து அதை செய்து முடிப்பது உற்சாகத்தை தரும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது நல்ல பலனை தரும்.
9. இந்த நேரத்தில் பார்க்கும் வேலை விட்டுவிட்டு புதிதாக வேலை மாற்றிக்கொள்வது போன்ற எண்ணங்கள் தோன்றலாம். மண வாழ்வில் குழப்பங்கள் தோன்றும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் விவாகரத்து வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்களுக்கு ஆண்டின் மிகவும் பரபரப்பான மாதங்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தனியாக பெரிய முடிவு எடுக்காமல் உங்கள் நலம் விரும்பிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும்.
10. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்பட்டால், மனச்சோர்வை விரட்டி, குளிர்காலத்தையும் இன்பமாக அனுபவிக்கலாம்.