40 வயதைத் தாண்டிவிட்டதா? பெண்கள் உடனடியாக செய்ய வேண்டிய 'ஒரு' முக்கிய பரிசோதனை!

breast cancer
breast cancerimage credit- indianpharmapost.com
Updated on

மார்பகப் புற்றுநோய் என்பது மார்பகத்தில் உள்ள அசாதாரண செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து கட்டிகளை உருவாக்கும் ஒரு நோயாகும். இதைக் கவனிக்காமல் விட்டால், இந்தக் கட்டிகள் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது, மேலும் ஒவ்வொரு 13 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இந்த நோயால் இறக்கிறார்.

இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் (Mortality rate) ஒரு லட்சம் பெண்களுக்கு சுமார் 12.7 ஆக உள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து 5 ஆண்டுகள் உயிர்வாழும் விகிதம் (5-year survival rate) சுமார் 60% முதல் 68% வரை மட்டுமே உள்ளது. ஆனால் அதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் 89% வரை உள்ளது. இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பாதிப்பும், அதன் காரணமாக ஏற்படும் இறப்புகளும் அதிகமாக உள்ளன.

குறிப்பாக இந்தியாவில் சுமார் 57% முதல் 60% வரையிலான மார்பகப் புற்றுநோய்கள் முற்றிய நிலையில் தான் (Stage 3 & 4) கண்டறியப்படுகின்றன. தாமதமான நோயறிதல் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன.

எனினும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்பு விகிதத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தவறாமல் மேமோகிராம் (Mammogram) பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள், வலி, அல்லது மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக அவசியமாகும்.

இதற்கிடையே மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் இந்திய விஞ்ஞானிகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். அதாவது மார்பகப் புற்றுநோயை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் நானோ துகள்களை (Nanoparticles)புனேவின் ⁠அகார்கர் (Agharkar) ஆராய்ச்சி நிறுவனம் (ARI) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித முடியை விட பல்லாயிரம் மடங்கு மெலிதான இந்த நானோ துகள்கள் ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டுமே குறிவைத்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது மார்பகப் புற்றுநோய் செல்களில் மட்டுமே காணப்படும் 'MUC1' என்ற புரதத்தை அடையாளம் கண்டு புற்று செல்களை அழிக்கும் இந்த துகள்கள், ஆரோக்கியமான செல்களை காக்கும் திறன் கொண்டவை.

புற்றுநோய் செல்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான முக்கிய பாதைகளை மரபணு மட்டத்தில் இந்தத் துகள்கள் தடுத்து நிறுத்துகின்றன. வழக்கமான கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சையைப் போலன்றி, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை. மேலும் இந்தத் துகள்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத மூலப்பொருட்களால் ஆனவை என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் 'அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் மெட்டீரியல்ஸ்' (Advanced Healthcare Materials) என்ற சர்வதேச அறிவியல் இதழ்களிலும் வெளியிடப்பட்டு, எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்லாக பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது எலிகளில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ள இந்த முறை, மனிதர்களுக்கு பயன்பட இன்னும் சில ஆண்டுகள் ஆராய்ச்சி அவசியம் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வை ARI-யின் நானோபயோசயின்ஸ் குழுவைச் சேர்ந்த நிலாத்ரி ஹல்தார், ராஜ்குமார் சமந்தா, சுராஜித் பத்ரா, தேவயானி செங்கர், சச்சின் ஜாதவ் மற்றும் வீரேந்திர கஜ்பியே ஆகியோர் மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
breast cancer
logo
Kalki Online
kalkionline.com