நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே!
உடல் எடையைக் குறைப்பதென்பது தன் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த விரும்பும் பல நபர்களின் பொதுவான குறிக்கோளாகும். இதற்காக படிப்படியான உடல் எடை இழப்பு பொதுவாக பரிந்துரைக்கப்பட்டாலும், சிலர் வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்பி, தவறான முறைகளைத் தேர்வு செய்கிறார்கள். அத்தகைய அணுகுமுறைகளால் ஏற்படும் அபாயங்களை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இப்பதிவில், விரைவான உடல் எடை இழப்பில் உள்ள அபாயங்கள் பற்றி பார்க்கலாம்.
விரைவாக உடல் எடையைக் குறைப்பதென்பது பெரும்பாலும் கடுமையான கலோரி கட்டுப்பாட்டை உள்ளடக்கிய. இது தசை இழப்புக்கு வழிவகுக்கும். தசை இழப்பது வளர்ச்சிதை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, உடல் எடை இழப்பை மோசமாக்குகிறது. இதனால் உடல் பலவீனம், குறைந்த ஆற்றல் மற்றும் காயம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம்.
கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் கிராஷ் டயட் போன்ற தீவிர நடவடிக்கைகள், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். கடுமையான கட்டுப்பாடுகளால் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ்கள் கிடைக்காமல் போவதால், உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
விரைவாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளால் பித்தப்பை கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. நமது உடல் கொழுப்பை விரைவாக உடைக்கும்போது, அது பித்தப்பை கற்களை ஏற்படுத்தலாம். இது கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தி உடல் நிலையை மோசமாக்குகிறது.
பல எடை இழப்பு முறைகள் அதிகப்படியான திரவத்தை உடலிலிருந்து நீக்குகிறது. இது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைக்கும். சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற எலக்ட்ரோ லைட்டுகள் சரியான உடல் செயல்பாடுகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, தசைப்பிடிப்பு, தலைச்சுற்றல், சீரற்ற இதயத்துடிப்பு, சோர்வு ஆகியவை ஏற்படும்.
மேலும் விரைவாக உடல் எடையைக் குறைப்பதால் உளவியல் தாக்கம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக உடல் எடை இழப்பு முயற்சிகளை உங்களால் நீண்ட காலம் கொண்டு செல்ல முடியவில்லை என்றால், அதனால் உங்கள் மீதே உங்களுக்கு விரக்தி ஏற்படலாம். இது உடலில் எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் உங்கள் மனநிலையை மோசமாக்கி, உணவு உட்கொள்வதை அதிகரித்து உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கலாம்.
எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், மெதுவாகவும், சீராகவும் குறைப்பதற்கு முயற்சி செய்யவும். விரைவாக குறைக்க முயற்சி செய்வது ஒருபோதும் நல்லதல்ல. குறிப்பாக, உங்களது உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை கருத்தில்கொண்டு அதற்கு ஏற்றவாறான எடை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதற்கு முன்னதாக ஒரு சுகாதார நிபுணர் அல்லது பதிவு செய்யப்பட்ட உணவியல் நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.