வைட்டமின் பி12 என்பது அனைவருக்குமே ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். இது ரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ தொகுப்பு மற்றும் முறையான நரம்பு செயல்பாடு உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வைட்டமின் பி12 அளவு தேவை. குறிப்பாக பெண்களுக்கு இந்த விட்டமின் குறைபாடு ஏற்பட்டால் சில குறிப்பிட்ட விளைவுகளை அவர்கள் அனுபவிக்க நேரிடலாம். இந்தப் பதிவில் பெண்களுக்கு விட்டமின் பி12 குறைவால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.
ரத்த சோகை: வைட்டமின் பி12 குறைபாடு பெண்களுக்கு ரத்த சோகையை ஏற்படுத்தும். இந்த நிலையில் உடலானது குறைவான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதால் சோர்வு, பலவீனம் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி12 குறைபாடு உள்ள பெண்கள் மாதாந்திர மாதவிடாய் இரத்த இழப்பு காரணமாக மிகவும் கடுமையான அறிகுறிகளை சந்திப்பார்கள். இது அவர்களின் இரும்புச்சத்து குறைபாட்டை மேலும் அதிகரிக்கும்.
நரம்பியல் பிரச்சனைகள்: விட்டமின் பி12, நரம்பியல் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. இந்த வைட்டமின் குறைபாட்டால் கை கால்களில் கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை, நடப்பதில் சிரமம், நினைவாற்றல் குறைபாடு போன்ற நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கணிசமாக பாதிக்கும்.
கர்ப்பகால பிரச்சனைகள்: கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி12 குறைபாடு தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் குறைப்பிரசவம், குழந்தையின் எடைக் குறைவு மற்றும் வளர்ச்சி பாதிப்புகள் போன்ற சிக்கல்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. எனவே குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதுமான அளவு விட்டமின் பி12 முக்கியமானது.
கருவுறுதல் பிரச்சனை: விட்டமின் பி12 குறைபாடு, பெண்ணின் கருவுறுதலை பாதிக்கலாம். இது ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து கருத்தரிப்பு வாய்ப்புகளைக் குறைக்கும். கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் உங்களது கருவுறுதல் ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் பி12 அளவை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
ஆஸ்டியோபோரோசிஸ்: வைட்டமின் பி12 குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறையும் நோயுடன் தொடர்புடையது. இதனால் எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் உடையக்கூடும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்கனவே ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் உடலில் தேவையான வைட்டமின் பி12 அளவு இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
வைட்டமின் பி12 குறைபாட்டைத் தடுக்க பெண்கள் இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்கள், தாவர அடிப்படையிலான அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். முடிந்தால் விட்டமின் பி12 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது.