

டீ, காபி என்று நாம் அதிகமாக இன்று குடித்துக் கொண்டிருக்கிறோம். டீ, காபி குடிப்பதற்கு பதிலாக தினமும் பருத்திப்பால் (Paruthi Paal) குடித்து வந்தால், நம் உடல் ஆரோக்கியம் அடைந்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்? இந்த பருத்திப் பாலை மதுரையில் பல இடங்களில் நிறைய மக்கள் விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த பருத்திப்பால் உண்மையிலேயே உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரக்கூடியதாகும்.
பருத்தி பால் குடிப்பதால் நம் உடலில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் கொழுப்பை இது குறைக்கின்றது. இதனால் ரத்த குழாய்களில் ரத்தம் சீராக ஓடுகின்றது. சளி, இருமல் ஆகியவை முற்றிலுமாக குணமாகின்றது. இந்த பருத்திப்பால் தயாரிப்பில் சுக்கு, ஏலக்காய், மிளகு, கிராம்பு போன்ற மருத்துவ குணமிக்க பொருட்கள் சேர்க்கப்படுவதால் நம் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும். இப்படி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அந்த பருத்திப்பால் எப்படி செய்யப்படுகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய் காண்போம்.
தேவையான பொருட்கள்
பருத்தி கொட்டைகள் - 500கி
பச்சரிசிமாவு - 250கி
ஏலக்காய் - தேவையான அளவு
சுக்கு- தேவையான அளவு
மிளகு - தேவையான அளவு
கிராம்பு- தேவையான அளவு
அச்சு வெல்லம் - 500கி
தேங்காய்பூ- தேவையான அளவு
செய்முறை:
முதலில் பருத்தி கொட்டைகளை இரவு தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊறிய அந்த பருத்திக் கொட்டைகளை நன்றாக ஆட்டு உரலில் போட்டு நல்ல பதத்தில் அரைத்து ஒரு துணியில் வைத்து அதிலிருந்து பருத்திப்பாலை பிழிந்து எடுக்க வேண்டும். அந்த பருத்திப் பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.
அதில் பச்சரிசி மாவை நன்றாக கலக்க வேண்டும். பிறகு அச்சு வெல்லத்தை எடுத்து போதுமான அளவு தண்ணீர் விட்டு வெல்லப் பாகு காய்ச்ச வேண்டும். அவ்வாறு காய்ச்சும் போது சுக்கு நன்றாகத் தட்டி பொடியாக்கி வெல்லப்பாகில் சேர்க்க வேண்டும். பின்னர் ஏலக்காய், மிளகு, கிராம்பு ஆகியவற்றை வெல்லப்பாகில் சேர்த்து நன்றாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இந்த காய்ச்சிய வெல்லப்பாகை பருத்திப்பால் இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் துருவி வைத்த தேங்காய் பூவை அதில் சேர்த்து மணமணக்க பருத்திப்பாலை எல்லோருக்கும் பரிமாறவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)