வயதானவர்களுக்கு ஞாபக மறதி வருவது இயல்பான ஒன்று தான். ஆனால் இளம் வயதினருக்கு, பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக ஞாபக மறதி ஏற்படும். இதற்கு சிறந்த தீர்வாக இருப்பது நீர்ப்பிரமி என்னும் மூலிகை செடி. இந்த செடியை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். ஆனால் இதன் பெயர் மற்றும் மருத்துவ குணங்கள் நமக்கு தெரியாமல் இருக்கும். பல நோய்களுக்கு சிறந்த தீர்வாக இந்த நீர்ப்பிரமி மூலிகை விளங்குகிறது.
நீர்ப்பிரமி செடி ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை செடியாகும். அதிக நீர் உள்ள இடங்களில் செழிப்பாக வளரக்கூடிய இந்த செடி பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
நீர்ப்பிரமி:
நீர்ப்பிரமி (Bacopa monnieri) நீர் நிலை ஓரங்களில் தாவரங்களுக்கு இடையில் ஊடுருவி வளரக்கூடிய செடியாகும். இந்த செடி வழவழப்பான, முட்டை வடிவ சிறு இலைகளை கொண்ட செடியாகும். இந்த செடியின் பூக்கள் வெள்ளை அல்லது நீல நிறங்களில் காணப்படும். மேலும் இது துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. பிரம்மா என சொல்லில் இருந்து பிரமி என்னும் சொல் வந்ததாக கூறப்படுகிறது.
நீர் பிரம்மியின் பயன்கள்:
நீர்ப்பிரமி செடியில் ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைட், பைட்டோகெமிக்கல்ஸ், பேகோசைட் ஏ, பேகோசைட் பி, போன்ற குளுக்கோசைடுகள் இருப்பதால் ஞாபக மறதிக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
நீர்ப்பிரமி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து இதனுடன் தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இதன் இலைகளை பறித்து மற்ற கீரைகள் சமைப்பது போல சமைத்து சாப்பிட்டு வரலாம். மேலும் மணத்த தக்காளி இலையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும்.
மேலும் இந்த நீர்ப்பிரமி இலைகளை சாப்பிட்டு வருவதால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
நீர்ப்பிரமி சாறு மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை கலந்து குடித்து வர செரிமான பிரச்சனை நீங்கும்.
முடி வளர்ச்சிக்கு நீர்ப்பிரமி சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி அடர்த்தியாக வளரும்.
நீர்ப்பிரமியை வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் நன்றாக இருக்கும். மேலும் தொண்டைக் கம்மல் தீரும்.
நீர்ப்பிரமியை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் உள்ள இடங்களில் கட்டி வந்தால் வீக்கம் குறையும். நீர்ப்பிரமி இலையை உலர்த்தி நீரில் கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர மலச்சிக்கல் நீங்கும்.
நெஞ்சில் கோழைக்கட்டு உள்ளவர்கள் இதன் வேரை அரைத்து நெஞ்சில் பூசி வர கோழைக்கட்டு நீங்கும். மேலும் நீரப்பிரமி செடி சாறு எடுத்து பசும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும்.
முக்கிய குறிப்பு: முதல் முறை சாப்பிடுபவர்களுக்கு குமட்டல் வரலாம். மேலும் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.