மழைக்காலம் வந்துவிட்டாலே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமில்லாமல், மழைக்காலத்தை கையாள்வதற்கான சில விஷயங்களை முன்பே ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டால், அந்த நேரத்தில் கஷ்டப்படாமல் ரிலாக்ஸாக இருக்கலாம். அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. மின்சாரக் கம்பியை கவனிக்கவும்: மழைக்காலத்தில் ஆங்காங்கே மின்சாரக் கம்பிகள் அறுந்துக் தொங்கிக் கொண்டிருக்கும். இதில் மின்சாரம் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அது தெரியாமல் அதை தொடுவதோ அல்லது அதில் கால் வைத்து விடுவதோ உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். எனவே, மழைக்காலத்தில் மின்சாரக் கம்பிகளிடமிருந்து தள்ளியிருப்பது பாதுகாப்பானதாகும்.
2. தேங்கியிருக்கும் தண்ணீரில் நடக்க வேண்டாம்: மழைக்காலத்தில் சாலையில் நடந்து செல்லும்போது சேறும், சகதியுமாக தேங்கியிருக்கும் நீரில் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்றவை இருப்பதால், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே, வீட்டிற்கு வந்ததும் சோப்பு போட்டு சுத்தமாக கால்களையும், கைகளையும் கழுவிவிட்டு வீட்டிற்குள் செல்வது நல்லதாகும்.
3. கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு: மழைக்காலத்தில் கொசுக்கள் நோய்களைப் பரப்புவதற்கு தயாராகிவிடும். மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் இதனால் பரவக்கூடும். அதனால், வீட்டில் கொசுவை துரத்துவதற்கான காயில், ஸ்ப்ரே போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மேலும், முழுக்கை கொண்ட ஆடையை அணிவது, இரவில் வெளியில் உட்காருவதைத் தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்றுங்கள். ஜன்னல்களில் கொசு வராமல் இருக்க ஸ்கிரீன் மற்றும் நெட் போன்றவற்றை பயன்படுத்தவும்.
4. கவனமாக வண்டி ஓட்டவும்: மழைக்காலத்தில் கவனமாக வண்டி ஓட்டுவது மிகவும் அவசியமாகும். ஏனெனில், சாலைகள் மிகவும் வழுக்கக் கூடியத்தன்மையில் இருக்கும். கார், பைக் போன்ற வண்டியில் செல்லும்பொழுது வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டிச் செல்வது அவசியமாகும்.
5. எலக்ட்ரானிக் பொருட்களில் கவனம்: மழை அதிகமாக பெய்யும் பொழுது வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை கழற்றி வைத்துவிடுவது நல்லது. இதற்கான முக்கியக் காரணம் Voltage fluctuation மற்றும் Load Shedding ஏற்படும் என்பதால் ஆகும். அதிக அழுத்த மற்றும் குறை அழுத்த மின்சாரம் மாறி வரும்பொழுது விலையுயர்ந்த பொருட்கள் சேதமடைய வாய்ப்புகள் உள்ளன.
6. எமர்ஜென்சி கிட்ஸ்: மழைக்காலத்தில் அடிக்கடி மின்சார துண்டிப்பு ஏற்படும். மேலும், அதிக மழையின் காரணமாக வெள்ளம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன என்பதால் எமர்ஜென்சி கிட் தயார் செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும். தூய்மையான தண்ணீர், கொசுக்களை விரட்டும் க்ரீம், தர்மோ மீட்டர், பேன்ட் ஏஜ் மற்றும் பஞ்சு, காயம் ஆறுவதற்கு ஆயின்மெண்ட், மருந்துகள், உடைகள், எமர்ஜென்சி லைட், மெழுகுவர்த்தி ஆகியவையாகும்.
7. குடை மற்றும் ரெயின்கோட் அவசியம்: மழைக்காலத்தில் குடை அல்லது ரெயின்கோட் கட்டாயம் இருக்க வேண்டியது அவசியம். இதை அணிந்துக் கொள்வதால், நமக்கு நோய் வருவதைத் தடுப்பது மட்டுமில்லாமல். போன், பர்ஸ் போன்றவை மழையில் நனையாமலும் பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் வெளியிலே செல்லும்போது முக்கியமான பொருட்களை பிளாஸ்டிக் பையில் வைத்து எடுத்துச்செல்வது நல்லது. அப்போதுதான் அதிகப்படியாக மழை வந்தாலும், முக்கியமான பொருட்களை நனையாமல் பாதுகாக்க முடியும். இந்த 7 வழிமுறைகளை கட்டாயம் மழைக்காலத்தில் பின்பற்றி பயன் பெறுங்கள்.