பல வகை உணவுப் பொருட்களையும் நாம் ஆரோக்கியமானவை என நினைத்து உண்கிறோம். ஆனால், தற்போது பல்வேறு வடிவங்களில் வரும் உணவுகளையும் உண்பதால், உடலுக்குக் கண்டிப்பாக ஆரோக்கியக் குறைவுதான் ஏற்படும். எந்தெந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் இரத்தம் அவசியம். ஏனென்றால், இரத்தத்தின் மூலம் மட்டுமே உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்வதில் இரத்த நாளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால்தான் இரத்த நாளங்களை சீராக வைத்திருந்தால்தான் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான இரத்தம் கிடைக்கும்.
சில நேரங்களில் தவறான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, உடல் தமனிகளில் அழுக்கு சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இரத்த நாளங்களை சுத்தமாக வைத்திருக்க முடியும். வெள்ளை அரிசி சாதத்தை அதிகம் உண்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, தமனியில் வீக்கம் ஏற்பட்டு ஆபத்தை உருவாக்கும். எனவே, வெள்ளை அரிசி சாதத்தை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு சர்க்கரையை சேர்த்துக்கொள்வதும் தவறு. இது பலருக்கும் தெரிவதில்லை. இரத்த நாளங்களுக்கு எதிரியான சர்க்கரையை உட்கொண்டால் உடல் எடை கூடும். கொழுப்பு அதிகரிக்கும். எனவே, இதைக் கட்டுப்படுத்துவது முக்கியம். முட்டை ஆரோக்கியமான உணவு என்றாலும், முட்டையின் மஞ்சள் கரு உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும். இதை அதிகம் சாப்பிட்டால் தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து விடும்.
மேலும், மாவில் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்வதையும் தவிர்ப்பது முக்கியம். அதாவது ரொட்டி, பிஸ்கட் ஆகியவை மைதாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும், சந்தையில் கிடைக்கும் பல உணவுப் பொருள்கள், துரித உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கிய எதிரி கொழுப்பு. வறுத்த, பொரித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இவை இரத்த நாளங்களில் படிந்து பிரச்னையை ஏற்படுத்தும். ஐஸ்கிரீம், வெண்ணெய் போன்ற கொழுப்பை அதிகரிக்கும் பொருட்களையும் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.