
நமது உடலின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான், நாம் எப்போதும் எனர்ஜியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும். ஆனால், என்னதான் நன்றாக சாப்பிட்டாலும் நீங்கள் எப்போதுமே சோர்வாக உணர்கிறீர்களா? அதற்குக் காரணம் நீங்கள் உட்கொள்ளும் உணவாகக்கூட இருக்கலாம்.
இன்றைய மோசமான, பரபரப்பான வாழ்க்கையில் யாருமே தங்களின் உணவில் கவனம் செலுத்துவதில்லை. ஏதோ வயிற்றை நிரப்ப உணவு என்று சாப்பிடுபவர்களாகவே இருக்கிறோம். ஆனால், நாம் உட்கொள்ளும் சில உணவுகளே நம்முடைய ஆற்றல் வெளியேற்றத்திற்கு காரணமாக உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வறுத்த உணவுகள்: வறுத்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் நம்முடைய ஆற்றல் இழப்புக்குக் காரணமாக உள்ளது. இதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நம் தமனிகளை அடைத்து, இரத்த ஓட்டத்தைக் குறைத்து ஆக்ஸிஜன் விநியோகத்தைக் தடைபடுத்துகிறது. மேலும், வறுத்த உணவுகளின் செரிமானத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுவதால் நாம் நமது ஆற்றலை விரைவில் இழந்துவிடுகிறோம். இதன் காரணமாகவே அதிக சோம்பல் உணர்வு ஏற்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பொதுவாகவே, பதப்படுத்தப்பட்ட உணவில் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும், உப்பும் அதிகமாக இருக்கும். இவை நம் உடலுக்கு அதிக சுமையைக் கொடுத்து ஆற்றல் பற்றாக்குறையை ஏற்படுத்தி, மந்தமாகவும் சோர்வாகவும் உணரச் செய்யும். இவற்றிற்கு பதிலாக காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரத உணவுகளை எடுத்துக்கொண்டால், உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
அதிகப்படியான காஃபின்: என்னதான் காபி குடிக்கும்போது நமக்கு தற்காலிகமாக ஆற்றல் கிடைத்தாலும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும்போது ஆற்றல் இழப்புக்கு வழிவகுக்கிறது. இது உங்களின் தூக்கத்தை முற்றிலுமாக சீர்குலைத்து மந்தநிலையை ஏற்படுத்தும். எனவே, குறைவாகவே காஃபின் எடுத்துக்கொண்டு, உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள்.
மது: மது உடலை நீர் இழப்புக்கு உட்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், இதனால் கல்லீரலின் திறன் குறையும். இதன் காரணமாக நமது ஆற்றல் இழக்க வழிவகுக்கும். மேலும், இது உறக்க முறைகளையும் சீர்குலைத்து விடுவதால் எப்போதும் சோர்வாக உணரச்செய்யும். எனவே, மது உட்கொள்வதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாம் உட்கொள்ளும் உணவுகளே நம்முடைய ஆற்றலுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதிகப் பங்கு வகிக்கின்றன. எனவே, தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.