

ஒருவருடைய ஒட்டு மொத்த ஆரோக்கியமும் அவர் இரவு நேரத்தில் தூங்குவதில் தான் அமைந்திருக்கிறது என்று சொன்னால் தவறே இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென்று தூக்க நிலை (Sleeping position) என்று ஒன்று அமைந்திருக்கிறது. இதில் எல்லா நிலைகளையும் விட வயிற்றை அழுத்திக்கொண்டு குப்புற படுத்து உறங்குதல் என்பதுதான் மிகவும் தவறான நிலை என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. இது எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலாக அமைகிறது என்பதைப் பார்ப்போம்.
வயிற்றை அழுத்தி குப்புறப் படுப்பதால், முதுகெலும்பு இயற்கையான நிலையில் இருந்து வேறுபடுகிறது. இதுதான் பல பிரச்னைகள் உடலில் உண்டாகக் காரணமாக அமைகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் இடுப்பு வலி, முதுகு வலி, கீழ் முதுகில் நாள்பட்ட வலி போன்றவை உண்டாகின்றன. மேலும் இதயம் மற்றும் நுரையீரலுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இடுப்புக்கு முன்பக்கம் அழுத்தம் கொடுக்கப்படுவதால் இடுப்பு எலும்பின் வளைவை மேலும் அதிகமாக்குகிறது.
அடுக்கி வைத்தாற் போல் அமைந்திருக்கும் முதுகு எலும்புகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் ரப்பர் போன்ற வட்டுக்கள் அமைந்துள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்றான உராய்வைத் தடுத்து சேதம் விளைவிக்காமல் பாதுகாக்கிறது. நாம் குப்புறப் படுத்து உறங்கும் பொழுது, இந்த வட்டுகளில் விரிசல் ஏற்பட்டு அதில் இருக்கும் ஜெல் போன்ற ஒரு திரவம் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. இதனால் நரம்புகளில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
இவை மட்டுமல்லாது குப்புறப்படுத்து உறங்கும் பொழுது, நாம் கழுத்தை ஒரு பக்கமாகத் திருப்பி முறுக்கியவாறு படுத்துக் கொள்கிறோம். இதனால் முதுகெலும்புவுடன் சீராக அமைந்து இருக்கும் கழுத்து நரம்புகளில் மாற்றம் உண்டாகி கழுத்து நரம்புகளில் முடிச்சுகள் போன்று ஏற்படலாம். இதனால் தீராத கழுத்து வலி வந்து சேருகிறது. பிறகு கழுத்தில் இருந்து தோள்பட்டை வரை வலி பரவும். கழுத்து, தோள்பட்டை மட்டுமல்லாது நரம்புகளின் இறுக்கம் தலைவலியையும் உண்டாக்கும்.
ஒரு பக்கமாக அதாவது ஒருக்களித்துப் படுத்தல் என்று பேச்சு வழக்கில் கூறுவோம் அல்லவா அது போன்று பக்கவாட்டில் திரும்பி படுப்பது தான் உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது.
சரி, ஏற்கனவே குப்புறப்படுத்து முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்கள் என்று கொள்வோம். இதற்கு என்ன நிவாரணம் என்று கேட்டால் இரு கால்களையும் தூக்கி கால்களுக்கு கீழே தலையணையைக் கொடுத்து அல்லது எங்கு வலி இருக்கிறதோ அந்த இடத்தில் தலையணையைக் கொடுத்து அணைப்பாக வைத்துக் கொண்டால் வலி குறைய வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
மிகக் கடுமையான வலி என்றால் மருத்துவரை அணுகுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆகவே, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தூக்கப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முயலலாம்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)