வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க சில டிப்ஸ்!
வெள்ளை ரத்த அணுக்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. நம்மை நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தால், நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதற்கு போதிய ஊட்டச்சத்து இல்லாமை, நாள்பட்ட நோய்கள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவை காரணமாக இருக்கலாம்.
வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல மருத்துவ முறைகள் இருந்தாலும், இயற்கை வழிகளும் உள்ளன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பதிவில் வெள்ளை ரத்த அணுக்களை இயற்கையாக அதிகரிக்க உதவும் உணவு வகைகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்:
எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் மீன், கோழி, பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
பச்சை இலைக் காய்கறிகள், சிவப்பு மாமிசம், பருப்பு வகைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். மேலும், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற போலிக் அமிலம் நிறைந்த உணவுகளும் உதவியாக இருக்கும்.
திராட்சை, கிரீன் டீ, பெர்ரி போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
இது தவிர, சில வாழ்க்கைமுறை மாற்றங்களையும் செய்வதால், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இத்துடன் தியானம், யோகா போன்ற ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் நுணுக்கங்களைப் பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.
வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல இயற்கையான வழிகள் உள்ளன. ஆனால், நீங்கள் எந்த ஒரு இயற்கை வைத்திய முறையை முயற்சிப்பதற்கு முன்பும் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. எந்த சிகிச்சை முறைக்கும் இயற்கை வைத்தியம் என்பது முழுமையான மாற்றாக இருக்காது. அது கூடுதல் சிகிச்சையாகவே கருதப்பட வேண்டும்.