
நம் உடல் முழு ஆரோக்கியத்துடன் திகழ, தினசரி சரிவிகித உணவை உட்கொள்வது அவசியம். சரிவிகித உணவில் ஓர் அங்கமாக இருப்பவை பழங்கள். பழங்களிலிருந்து உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை நாம் பெறுகிறோம். குறிப்பாக ப்ளூ பெரி பழத்தில் வைட்டமின் C, K, மாங்கனீஸ், மற்றும் டயட்டரி நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், ஃபிளவனாய்ட் போன்ற ஃபைட்டோ கூட்டுப்பொருட்கள் அதிகம் நிறைந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் நிறைந்த பழம் ப்ளூபெரி.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அதிகம் விளைவிக்கப்பட்டு வந்த ப்ளூபெரி சமீப காலமாக இந்தியாவிலும் சில மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இருந்தபோதும், அதிகளவு தேவை, தொழிலாளர் பற்றாக்குறை, எதிர்மறை வெப்பநிலை போன்ற காரணங்களால் இதன் விலை கூடுதலாக உள்ளது. இதற்கு மாற்றாக, இதே அளவு ஊட்டச் சத்துக்கள் தரக்கூடிய வேறு சில பழங்களை நாம் உட்கொள்ளப் பழகிக்கொண்டால் நம் பட்ஜெட்டில் துண்டு விழாது. அவ்வாறான பழங்கள் மூன்றைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1.கருப்பு திராட்சை (Black Grapes): சுலபமாகக் கிடைக்கக் கூடிய பழம். ப்ளூபெரியில் உள்ளது போலவே, இதில் அந்தோசியானின் (Anthocyanins) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் கருப்பு திராட்சையில் அதிகம் நிறைந்துள்ள ரெஸ்வராட்ரால் (Resveratrol) என்னும் கூட்டுப் பொருள் இதய ஆரோக்கியம் காக்கவும், முதுமை நிலை அடைவதை தள்ளிப்போடவும், புற்றுநோய் வருவதைத் தடுக்கவும் கூட உதவி புரியும். இதிலுள்ள அதிகளவு நீர்ச் சத்து உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். நார்ச்சத்து சிறப்பான செரிமானத்துக்கு உதவும்.
2.ஜாமுன்(Jamun): குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட பழம் ஜாமுன். இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பாதுகாக்க உதவும். ஜாமுன் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C, இரும்புச் சத்து ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடலின் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடவும், கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி அளவை அதிகரிக்கச் செய்யும். செரிமானத்தை மேம்படுத்தவும், மலச் சிக்கல் நீங்கவும் நாவல் பழம் உதவி புரியும்.
3.மாதுளம் பழம் (Pomegranate): மாதுளம் பழ முத்துக்களில் (seeds) பாலிஃபினால்ஸ் (Polyphenols), வைட்டமின் C, மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தைக் காக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. சருமத்தின் அடிப் பரப்பில் கொல்லாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து சருமத்திற்கு பள பளப்பான தோற்றம் தருகின்றன. உடலின் வீக்கங்களைக் குறைக்கவும்,
ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மாதுளம் பழம் உதவி புரிவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாதுளம் பழத்தி லுள்ள கரையக் கூடிய நைட்ரேட்ஸ் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. ப்ளூபெரி பழத்திற்குப் பதிலாக கருப்பு திராட்சை, ஜாமுன்(நாவல் பழம்) மற்றும் மாதுளம் பழம் ஆகிய, சுலபமாகக் கிடைக்கக் கூடிய பழங்களை உட்கொண்டு உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)