ஆனியன் எனப்படும் வெங்காயத்தில் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் சாம்பார் வெங்காயம் என பல வகைகள் உள்ளன. பொதுவாக, எல்லா வகை வெங்காயங்களுமே நார்ச்சத்து, ஊட்டச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உணவுகளுக்கு நல்ல சுவையும் தரக்கூடியவையே. வெள்ளை வெங்காயத்திற்கு சில தனித்துவமான குணங்கள் உண்டு. ஒயிட் ஆனியனில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதிலுள்ள அதிகளவு நீர்ச்சத்தானது கோடையிலும் மற்ற எல்லா காலங்களிலும் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும், உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகிறது.
ஒயிட் ஆனியனில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தீங்கிழைக்கும் ஃபிரிரேடிக்கல்களால் உண்டாகும் செல் சிதைவைத் தடுக்க உதவுகின்றன. அதிகளவு வெப்பத்தின் காரணமாக உடலுக்குள் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
இதிலுள்ள குர்செட்டின் என்ற கூட்டுப் பொருளானது ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இது கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் உண்டாகும் சன் பர்ன், வியர்க்குரு, வேனல் கட்டிகள், கொப்புளங்கள் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
கோடைக் காலங்களில் நோய் வரவழைக்கச் செய்யும் கிருமிகள் மற்றும் வைரஸ்கள் நம் உடலைத் தாக்கும் அபாயம் அதிகம். அதைத் தடுக்க நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை வலுவடையச் செய்வது அவசியம். நாம் உண்ணும் உணவில் வெள்ளை வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அதிலுள்ள வைட்டமின் C மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிரிக்க உதவுகிறது.
சிறப்பான செரிமானத்துக்கு உதவக்கூடிய நார்ச்சத்து ஒயிட் ஆனியனில் அதிகம் உள்ளது. வெப்பம் காரணமாக அதிகளவு நீர் வியர்வை மூலம் உடலிலிருந்து வெளியேறும். அதன் மூலம் உண்டாகக்கூடிய மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்க நார்ச்சத்து உதவும். ஒயிட் ஆனியனை பச்சையாய் உண்பதால் அதிலுள்ள அதிகளவு நீர்ச்சத்து வெயில் நேரத்தில் உடலை குளிர்விக்க உதவும்.
வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி உட்கொண்டு வெப்ப நேரங்களிலும் உடலை குளிர்ச்சியாக வைப்போம்.