குடலுக்கும் மூளைக்கும் உண்டான தொடர்பு... குடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவங்கள்! 

Gut-Brain Connection
Gut-Brain Connection

கடந்த சில ஆண்டுகளில் விஞ்ஞானிகள் நமது குடலுக்கும் முளைக்கும் இடையிலான உறவைப் பற்றிய பல உண்மைகளை கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டு முக்கிய உறுப்புகளுக்கு இடையேயான தொடர்பு எந்த வகையில் இருக்கிறது என்பது பல ஆய்வுகள் மூலமாக வெளிவந்துள்ளது. எனவே நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த குடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். 

நமது குடல் மற்றும் மூளை இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்பு கொள்கிறது. இந்த சிக்கலான இணைப்பில், மத்திய நரம்பு மண்டலம், குடல் நரம்பு மண்டலம் மற்றும் நமது குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இது குடல் மைக்ரோபயோட்டா என அழைக்கப்படுகிறது. குடல் மைக்ரோபயோடா, ட்ரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், வைரஸ்கள், புஞ்சைகள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைக் கொண்டதாகும்.

இவை குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் குடல் நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டு, செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் குடல் இயக்கம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. எனவே நமது குடல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மூளையும் சிறப்பாகச் செயல்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

குடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்: 

மனநலம்: பல ஆய்வுகள் குடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் வலுவான தொடர்பு உள்ளதை கண்டறிந்துள்ளன. குடல் நுண்ணுயிர்கள் செரட்டோனின், டோபமைன் மற்றும் GABA உள்ளிட்ட பல்வேறு நரம்பியல் ரசாயனங்களை உருவாக்குகின்றன. அவை நமது மனநிலை உணர்ச்சிகள் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை கையாள்வதற்கு மிகவும் முக்கியமானவை. குடல் நுண்ணுயிரிகளின் ஏற்றத்தாழ்வுகள் பதட்டம், மனச்சோர்வு மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற நோய்களுடன் தொடர்புடையவை. 

நோய் எதிர்ப்பு: வலுவான நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு ஆரோக்கியமான குடல் அமைப்பு அவசியம். குடல் மைக்ரோபயோட்டா நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. குடல் பாக்டீரியாக்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அலர்ஜி பாதிப்புகள், தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம். 

ஊட்டச்சத்து உறிஞ்சுதல்: நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது குடலின் பொறுப்பு. பல்வேறு நுண்ணுயிரிகளைக் கொண்ட ஆரோக்கியமான குடலால், ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச முடியும். நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுவது இதனால் உறுதி செய்யப்படுகிறது. இதற்கு மாறாக, குடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். 

மன அழுத்தம் குறையும்: மன அழுத்தத்தில் குடல் - மூளை இணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மன அழுத்தம் குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைத்து, அழற்சி குடல் நோய், குடல் எரிச்சல் போன்ற தீவிர குடல் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பம் என்னென்ன செய்யும் தெரியுமா? ஜாக்கிரதை மக்களே!
Gut-Brain Connection

நம் குடலுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் அவற்றின் நலனை காக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். மன அழுத்தத்தால் குடலுக்கு பாதிப்பு ஏற்படலாம், அதேபோல குடல் பாதிப்பால் உங்கள் மனநிலை சீர்குலையும் வாய்ப்புள்ளது. எனவே இனி உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். இது நிச்சயம் உங்களது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com