
நம்மில் பலருக்கு இரவு நேரத்தில் தூக்கத்தின் இடையே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தொல்லை தரும் ஒன்றாக இருக்கிறது. எழுந்தால் தூக்கம் தொலைந்து போகுமோ என்ற பயம் வேறு. ஆனால், அடிக்கடி இப்படி எழுந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் ஏற்படும் சில மாற்றங்களின் காரணமாக கூட இவ்வாறு நேரிடலாம்.
சிறுநீரகம் ஒரு முக்கியமான உறுப்பு. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமான உடல் நலத்தின் அடையாளம். ஆனால், சிலருக்கு இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
அதிகப்படியான நீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். அதேபோல, சிலருக்கு நீர் அருந்தாமலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கத்தின் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், உடல் நலத்தில் சில பிரச்சனைகள் இருக்கக்கூடும்.
சிறுநீரகப் பாதையில் தொற்று இருந்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். பால்வினை நோய்கள் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கும் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
சிறுநீர்ப்பை நிரம்பி வயிறு வீங்கத் தொடங்கும்போது, தூக்கத்தில் கழிப்பறை நோக்கி ஓடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. முன்பெல்லாம் இது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தான் இருந்தது. ஆனால், இப்போது இளம் வயதிலேயே இந்தப் பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது.
தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்கி வைப்பது, பால்வினை நோய், நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் சிறுநீரகப் பாதையில் கிருமிகள் உருவாகின்றன. இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், அவசரமாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சிலர் தூக்கத்தில் அவசரமாக சிறுநீர் கழிக்க எழுந்து செல்வார்கள். இதனால் காலில் ரத்தம் தேங்கி, இதயத்திற்கும் மூளைக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, இரவில் சிறுநீர் கழிக்கத் தோன்றினால், சில நொடிகள் எழுந்து அமர்ந்த பிறகு சிறுநீர் கழியுங்கள்.
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கம் கெட்டுப் போகிறது. இதனால், பகல் நேரத்தில் சோர்வு, உடல் அசதி, மற்றும் கவனக்குறைவு ஏற்படலாம். மேலும், சில நேரங்களில் தூக்க கலக்கத்தில் வேகமாக கழிவறைக்குச் செல்லும்போது கீழே விழுந்து காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே உங்களுக்கு, இந்தப் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மருத்துவர் உங்கள் உடல் நிலையை பரிசோதித்து, தேவையான சிகிச்சையை பரிந்துரைப்பார். சுய மருத்துவம் செய்வதை தவிர்க்கவும்.