நம் வீட்டிலே பயன்படுத்தக்கூடிய சாதாரண உணவுப்பொருட்களின் மகிமையை அறியாமல் இருந்திருப்போம். என்றாவது ஒரு நாள் அதன் பயன்களை யாராவது சொல்லி கேட்கும்போது ஆச்சர்யப்பட்டு போவோம். ‘இந்தப் பொருளுக்கு இப்பேர்ப்பட்ட மருத்துவ குணங்களா?’ என்று நினைப்போம். அப்படி நம் வீட்டிலே இருக்கும் ஒரு பொருள்தான் வெந்தயம். வெந்தயம் முதலில் ஆசியாவிலேயே பயிரிடப்பட்டது. பிறகு இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா போன்ற இடங்களில் பயிரிடப்பட்டது.
வெந்தயத்தை நம்மில் பலர் மாதவிடாய் பிரச்னை, அதிகப்படியான கொலஸ்ட்ரால், உடல் எடை குறைய போன்ற பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்கிறோம். வெந்தயம் நம் உடலில் இன்சுலினை சுரப்பதற்கு உதவுகிறது. மேலும், டெஸ்ட்டோஸ்டெரான் மற்றும் ஈஸ்ட்ரோஜனை சுரக்கவும் உதவுகிறது.
வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி உள்ளவர்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. வெந்தய பவுடரை மாதவிடாய் சமயத்தில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் ஏற்படும் வலியினை குறைக்கும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை தூண்டுவதற்கு வெந்தயம் மிகவும் உவுகிறது. வெந்தயத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அது இதயத்திற்கு மிகவும் நல்லதாகும். வெந்தயம் உடலின் இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது.
உடலில் ஏற்படும் அதிகப்படியான வீக்கத்தை வெந்தயம் போக்கும். வெந்தயத்தில் பிளாவனாய்ட்ஸ் இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவும்.
சுடுநீரில் ஊறவைத்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வருவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். வெந்தயம் ஜீரணத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், பெண்களுக்கு தாய்பால் சுரப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவிகரமாக உள்ளது. தினமும் வெந்தயம் சாப்பிட்டு வருவதால், முடி நன்றாக வளரும் என்று கூறப்படுகிறது.
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால், உடலில் உள்ள மெட்டபாலிஸத்தை அதிகரித்து உடல் எடை குறைக்க உதவும். அதேபோல வெந்தய டீ குடிப்பதும் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் தருவதாகும். இனி, வெந்தய டீயை எப்படி தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.
முதலில் 2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து அதில் நான்கு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் எவ்வளவு கொதிக்கிறதோ அவ்வளவு நல்லது. பிறகு வெந்தயத்தை வடிகட்டி விட்டு வெந்தய டீயை பருகவும். இதை தினமும் மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடிப்பது மிகவும் நல்லதாகும்.