meta property="og:ttl" content="2419200" />
குளிர்பானங்கள், இளநீர், மோர், பழங்கள் போன்றவை கோடையை சமாளிக்க உதவுகின்றன. இவற்றையெல்லாம் விட கோடை வெப்பத்தை சமாளிக்க மிகவும் உதவுவது வெட்டிவேராகும். வெட்டிவேரானது வெம்மையை நீக்கி குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி, நறுமணத்தையும் தருகிறது. மேலும், பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமையும் கொண்டது.
வெட்டிவேரில் மணம், குணம் தரும் ஒரு வகையான வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இதிலிருந்து மணம் தரும் ஒரு வகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனைப் பொருட்கள் தயாரிப்பில் இடம் பெறுகிறது. வெட்டிவேரை துண்டுகளாக நறுக்கி குடிநீரில் இட்டு பயன்படுத்தலாம். பொடியாகவோ கஷாயமாகவோ எண்ணெய்யாகவோ பயன்படுத்தலாம். விசிறி, பாய், திரை தயாரித்துப் பயன்படுத்தலாம்.
வெட்டிவேரை நீரில் இட்டு அல்லது சந்தனத்துடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இது பல்வேறு சிறப்பு குணங்களை தன்னகத்தே கொண்டது. குளிரூட்டி, பசியூட்டி, சிறுநீர் பெருக்கி போன்ற தன்மைகளைக் கொண்டது. உடல் வெம்மையை நீக்கி, குளிர்ச்சியூட்டுகிறது வியர்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்துகிறது. உடல் சூடு, கண் எரிச்சல், தலைவலி இவற்றை குணப்படுத்துகிறது. கோடையில் ஏற்படும் நீர்சுருக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவற்றுக்கும் நிவாரணம் தருகிறது.
வெட்டிவேரை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அரை கப் வீதம் மூன்று வேளை அருந்த வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு தீரும். வெட்டி வேரை அரைத்து உடல் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தேய்க்க அரிப்பு, எரிச்சல் மாறும். சந்தனப் பொடியுடன் வெட்டிவேர் பொடி கலந்து உடலில் பூசிக் குடிக்க உடல் மணம் வீசும். சரும நோய்கள் ஏற்படாது.
வெட்டிவேர் பொடியுடன் சந்தனப் பொடி கலந்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் பொடியை இளநீரில் கலந்து வேர்க்குரு வேனல் கட்டி மேல் பூசி அரை மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேர்க்குரு, வேனல் கட்டிகள் போய்விடும். இரவில் வெட்டிவேரை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அரை கப் வீதம் மூன்று வேளை அருந்த உடல் சூடு தணியும்.
வெட்டிவேரை மோர் அல்லது பாலில் ஊற வைத்து வடிகட்டி சாப்பிட கோடை தொல்லைகளான நாவறட்சி, அதிக தாகம் போன்றவை தீரும். வெட்டிவேர் பொடியை பாலில் கலந்து இனிப்பு சேர்த்து சாப்பிட, கண் சூடு, தொண்டை வலி, நாவறட்சி அதிக தாகம் தீரும். மண்பானை நீரில் சிறிதளவு வெட்டிவேரை போட்டு வைத்து குடித்தால் வெம்மை தீரும் .தேக அனல், நீர் சுருக்கு மாறும். அதேபோல் வெட்டிவேர் பொடியை நீரில் கலந்து சாப்பிட அஜீரணப் பிரச்னை தீரும்.
வெட்டிவேர் பொடியை தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்புண்கள் குணமாகும். வெட்டிவேர் விசிறி குளிர்ச்சி தரும். வெட்டிவேர் தட்டியை வீடுகளில் கட்டி நீரால் நனைக்க ஏர்கண்டிஷன், ஏர்கூலர் போல குளிர்ச்சியைத் தரும். மின்விசிறியின் கீழ் வெட்டிவேர் பாய் அல்லது வெட்டிவேர் தட்டியை நனைத்து வைத்தால் அறை முழுவதும் குளிர்ச்சி பெறும். வெட்டிவேர், சந்தனம், மஞ்சள் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து கொப்பளம், கட்டி மீது தடவி வர விரைவில் ஆறிவிடும். அக்னி நட்சத்திர வெப்பத்தை சமாளிக்க வெட்டிவேரை வாங்கிப் பயன் பெறுங்கள்.