இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் திரையுலகினர் மட்டுமல்லாது பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதுதான் ஆன்மீகமும் அறிவியலும் செல்லுகின்றன. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை நடந்துவிடுகிறது. அவ்வாறு தற்கொலை என்ற இறுதிகட்ட தவறான முடிவு நம் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு மீட்க முடியாத இழப்பை உருவாக்கிவிடுகிறது. அதேபோல் ஒருவர் தற்கொலை எண்ணத்திற்கு செல்வதற்கு முன்பு அவரிடம் தோன்றும் மனஅழுத்தத்தை குடும்பத்தினர், நண்பர்கள் எவ்வாறு அறிந்துக்கொள்ள முடியிம் என்பதை பிரபல மனோதத்துவ நிபுணரும் சிநேஹா தற்கொலை தடுப்பு நிறுவனருமான டாக்டர். லக்ஷ்மி விஜயகுமாரிடம் கடந்த உலக தற்கொலை தடுப்பு நாளையொட்டி கேட்டிருந்தோம் அவர் சொன்ன வழிகாட்டு நெறிமுறைகள் உங்களின் பார்வைக்காக...
ஒருவர் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரைச் சுற்றியுள்ளவர்கள் தெரிந்துக்கொள்வதற்கான அறிகுறிகள் என்ன?
ஒரு நபர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளார் என்பதினை அவரை சுற்றியுள்ளவர்கள் நிச்சயமாக அறிய முடியும்... சரியாக புரிந்துகொண்டால்! பொதுவாக மனதத்துவவியல் துறையில் தற்கொலை எதற்கும் தீர்வல்ல என கூறுவோம். தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளவர்கள் 80 சதவீதம் பேர் தங்களுடன் இருப்பவர்களிடம் பிரச்னைகளை பகிர்கிறார்கள்.
இதுபோன்ற எண்ணத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் ''எனக்கு வாழபிடிக்கவில்லை", "தூக்கத்திலேயே செத்துபோயிடணும்", "எங்கேயாவது ஓடிபோயிடலாம் என தோன்றுகிறது", இதுபோன்ற வார்த்தைகளை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் நாம் பொதுவாக என்ன செய்வோம்? அட்வைஸ் செய்யத் தொடங்கிவிடுவோம். “ஏன் அப்படி சொல்றீங்க. உங்களைவிட எவ்வளவு பேர் மோசமாக இருக்கிறார்கள் என பாருங்கள், அவர்களை பார்த்து நீங்க நல்லா இருப்பதாக நினைத்து சந்தோஷப்படுங்கள்; அல்லது ஒரு பத்து நாள் ஆபிஸ்கு லீவ் போட்டு எங்கேயாவது சுற்றிப்பார்த்துவிட்டு வாங்க” என்போம். எதனால் அவர்களுக்கு இதுபோன்ற எண்ணம் உருவாகியுள்ளது? என பாதிக்கப்பட்டுள்ள நபரின் உணர்ச்சிகளை புரிந்துக்கொள்வதற்கு நாம் முயற்சி செய்வது கிடையாது. அதுதான் ரொம்ப வருந்தத்தக்கது. அதற்காகதான்
சிநேஹா (+91 44 2464 0050 +91 44 2464 0060 ) தொண்டு நிறுவனத்தையே தொடங்கினோம்.
பொதுவாக தற்கொலைக்கு மூன்றுவிதமான பண்புகள் உள்ளன.
முதலாவது: IMPULSIVE அந்த நொடியில் எடுக்கும் திடீர் முடிவு. அந்த சூழ்நிலையை தாங்கிக்கொள்ளமுடியாமல் அடுத்த நொடியில் தற்கொலையில் ஈடுப்பட்டுவிடுவார்கள்.
இரண்டாவது: உதவி கேட்கும் கூக்குரல். ஒருவர், ‘எனக்கு வாழப்பிடிக்கவில்லை சாகவேண்டும், ஏதாவது செய்யுங்கள்’ என்று உதவி கேட்கும் குரல். ஆனால், இந்தக் குரலை நாம் பெரும்பாலும் கேட்பதில்லை. கேட்டாலும், சரியான முறையில் உதவ நமக்குத் தெரிவதில்லை.
மூன்றாவது: சாகலாமா... வேண்டாமா... என்ற உணர்ச்சியில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் நிலை. சில சமயம் சாகலாம் போல் இருக்கும்; சில சமயம் அந்த எண்ணம் வராமல் இருக்கும். இருதலை கொள்ளிப்போல. இதுபோன்ற நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் மனவோட்டத்தை கண்டறிந்து அவர்களின் பிரச்னையை காது கொடுத்து கேட்டு, அவருக்கு உதவும் முயற்சியில் இறங்கினால் 80 சதவீதமான தற்கொலைகளை தடுத்து நிறுத்தமுடியும். இதனை எப்படி கண்டுப்பிடிக்கலாம் என்றால் நான் முன்பே சொன்னதுபோல், தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களே அதனை சொல்லுவார்கள்.
மேலும், இதுபோன்ற எண்ணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எல்லா விஷயத்திலும் பின்வாங்கிக்கொண்டு இருப்பார்கள். முன்பு, தங்களை நன்றாக அழகுப்படுத்திக்கொண்டிருந்தவர்கள் அதில் அக்கறை செலுத்தாமல் இருப்பார்கள். சரியாக சாப்பிடமாட்டார்கள். ஒருசிலர் திடீரென இன்சூரன்ஸ் எடுப்பார்கள். சிலர் திடீரென உயில் எழுதி வைப்பார்கள்.
மேலும் தங்களுக்கு நெருக்கமானவர்களை அடிக்கடி நேரில் சந்தித்துவிட்டு வருவார்கள். தங்களுக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் மற்றவர்களுக்கு தானமாக அல்லது பரிசாக கொடுத்துவிடுவார்கள். சரியாக தூங்கமாட்டார்கள். Behavioral symptoms இருக்கும். என்ன ஆனாலும் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் மூளையில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒரு அறிகுறி தென்படும். இதுபோன்ற மாற்றங்களை அவர்களின் அருகில் உள்ளவர்களால் கண்டிப்பாக கண்டுபிடிக்கமுடியும்.
இதுபோன்ற அறிகுறிகளை நாம் கண்டுப்பிடித்துவிட்டாலே நம் உடன் இருப்பவர்கள் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்துக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்பட முடியும்.