ஆலயம் தொழுவது சாலவும் நன்று! என்று கொன்றை வேந்தன் மூலம் கூறுவார் ஔவையார்!
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்! என்றனர் நம் முன்னோர்.
சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து இறைவனை வணங்குவது ஒரு வித ஆசனம் என்றும், பிரகாரத்தில் சுற்றி நடப்பதும், நவ கிரகங்களை ஒன்பது முறை வலம் வருவதும் நடைப்பயிற்சி என்றும், இவை அனைத்துமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம் என்றும் பெரியோர் கூறுவர்.
இந்தியா ஜனத் தொகையில் மட்டும் முதல் இடத்தில் இல்லை!
சர்க்கரை வியாதியிலும், இதய நோயிலும் கூட அதற்கு முதலிடந்தான் என்று முணகுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்!
கல்யாண வரவேற்பில் நடனமாடும் கல்லூரி மாணவர்கள் சிலர் எதிர்பாராவிதமாக இறக்கின்ற நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் அடிக்கடி அரங்கேறி அல்லல் படுத்துகின்றன!
இன்சுலின் போட்டுக் கொண்டு பள்ளி செல்கின்ற மாணவர்களும், இதய நோய்க்கு மருந்து சாப்பிட்டு விட்டுக் கல்லூரி செல்கின்றவர்களும் எண்ணிக்கையில் இன்று கூடிக் கொண்டே போகிறார்கள்!
ஆலயங்கள் மனதுக்கு அமைதியையும், உடலுக்கு உறுதியையும் ஒரு சேர வழங்க வேண்டுமென்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் இறைவனை நினைந்தபடி பிரகாரங்களில் நடப்பதையும், சாஷ்டாங்க நமஸ்காரத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்!
அத்தோடு நிறுத்தவில்லை! கோயில்களின் எதிரிலோ, பக்கத்திலோ குளங்களையும் வெட்டி வைத்தார்கள்; அந்தக் குளங்களில் மீன்களையும் விட்டு வைத்தார்கள். ஆனால் நாம்தான் அவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை. மீன்களின் ஓட்டத்தையும், துள்ளலையும் கண்டால் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு இதயம் இலகுவாகுவதாக மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது! பல வீடுகளில் மீன் தொட்டிகள் வைத்திருப்பதற்கும் காரணம் அதுதான்.
கோயில் குளங்களை நாம் பலவாறாகப் பயன்படுத்திக் கொள்கிறோமே ஒழிய அதில் வளரும் மீன்களைப் பார்த்து மன ஆறுதல் அடைய நேரம் ஒதுக்குவதில்லை.
திருப்பரங்குன்ற முருகன் கோயில் குளத்தில் பொரியைத் தூவும்போது மீன்கள் குழாமாகப் படையெடுக்கையில் மனதில் தோன்றும் உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்! இதயத்திற்கு அவை தரும் அமைதி இணையற்றது!
நம் நாட்டில் அது போன்று நிறைய கோயில்கள் உள்ளன. ஆனால் மீன்களைப் பார்த்து மனதின் இறுக்கத்தைப் போக்கிக் கொள்ளும் மனநிலையில் நாம்தான் இருப்பதில்லை!
சென்னையைப் பொறுத்தவரை, எமது அனுபவத்தில், எங்கள் பகுதியான கூடுவாஞ்சேரி அருள் நகரிலுள்ள செல்வ கணபதி கோயிலின் உள்ளே உள்ள விவசாயப் பெருங்கிணற்றை கம்பி வலையால் அடைத்து, அதனுள் வெள்ளை, சாம்பல் நிற மீன்களை விட்டுள்ளார்கள். ராமர் சன்னதிக்கு அருகில் நின்று அந்த மீன்களைப் பார்க்கையில் இதயம் இதமாகிறது.
அது போலவே, சென்னை சூளையிலுள்ள, 500 ஆண்டு பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி ஆலயக் குளத்தில், வளர்ந்த மீன்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கையில் மனதில் குதூகலம் பொங்கும்!
இறைவனின் பத்து அவதாரங்களில் ‘மத்ஸ்யா’ அவதாரமும் ஒன்று! மத்ஸ்யா என்பது மீனைக் குறிப்பது. இறைவன் மீன் வடிவிலும் இருக்கிறார் என்பதே இதன் பொருள்!
இனி கோயில்களுக்குச் செல்கையில், இறைவனை வணங்கிய பிறகு, அக்கோயில்களின் தடாகங்களில் மீன்கள் இருக்குமானால், சில நிமிடங்கள் அவற்றை கண்டு களிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்வோம். அவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்!