பேன் தொல்லை நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நிவாரணம் பெறலாம்!
நீளமான கூந்தல் வேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இருக்க முடியாது. எனினும், அத்தகைய நீளக்கூந்தலை பராமரிப்பது என்பது சற்று கடினம்தான். கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளாவிட்டால் அதில் பேன் உருவாகிவிடும். இதனால் கூந்தல் பாழாவது மட்டுமில்லாமல், ஆரோக்கிய சீர்க்கேடும் ஏற்படும். எனவே, பேன்கள் தலையில் உருவாகிவிட்டால், அதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்கக்கூடிய சில எளிய குறிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கூந்தலை வினிகர் மற்றும் சுடுதண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். வினிகரில் பேனை அழிக்கக்கூடிய தன்மை உள்ளது. எனவே, இதை நேரடியாகவே தலையிலே தடவுவது சிறந்தது. பிறகு 30 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு குளித்துவிடுவது சிறந்தது.
2. தேங்காய் எண்ணெய்யில் Tea tree oil 3 சொட்டுக்கள் விட்டு அதனுடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தலையில் தடவி விட்டு 20 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு குளித்துவிடுவது பேனை போக்குவதற்கான சுலபமான வழியாகும்.
3. வெற்றிலை நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதால் அரிப்பு, பொடுகு போன்றவற்றை சரிசெய்கிறது. இது பூஞ்சை தொற்றைத் தடுப்பதோடு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
4. வேப்பிலையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பிலையில் பூச்சிக்கொல்லி பண்புகள் உள்ளதால், பேனை அழிப்பதில் சிறந்து விளங்குகிறது. வேப்பிலை பிடிக்காதவர்கள் வேப்பங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
5. மிளகு காரத்தன்மையை கொண்டது. கருப்பு மிளகு பொடுகு சம்பந்தமானப் பிரச்னைகளைப் போக்க உதவுகிறது. மிளகு உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கவும், ஊட்டச்சத்து பெறவும் உதவுகிறது.
6. பேன் பிரச்னையை போக்க துளசி பயன்படுத்தப்படுகிறது. துளசி நீரைக்கொண்டு கூந்தலை அலசுவது பேன் பிரச்னையை போக்கும். துளசியை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு அந்த எண்ணெய்யை வடிகட்டி தலையில் தடவுவதால், பேன் தொல்லை நீங்கும். துளசி இலையை பேஸ்ட் செய்து அதை கூந்தலிலே தடவி 10 நிமிடம் கழித்து அலசுவது பேனைப் போக்க சிறந்த வழியாகும். வீட்டிலேயே இருக்கக்கூடிய இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி பேன்களை சுலபமாகப் போக்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.