
அனுபவம் நிறைந்த அகவை எழுபதைக் கடந்தவர்களே! வாங்க! நீங்களனைவருந்தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகர்கள்! இது உங்களனைவரையும் பயமுறுத்துவதற்காக எழுதப்படுவது அல்ல! ஓர் அன்பான எச்சரிக்கை செய்யவே!
நீங்களனைவரும் வாழ்க்கையின் பல நிலைகளைக் கடந்து, பல இன்னல்களை அனுபவித்து, பற்பல தோல்விகளையும் வெற்றிகளையும் பார்த்து வந்தவர்கள்! உங்கள் அனுபவங்களின் மூலம் நீங்கள் கற்ற பாடங்களை, உங்கள் சந்ததியினருக்குக் கடத்தும் காலக் கட்டத்தில் இருப்பவர்கள்! எனவே உங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பதை நன்றாக உணர்ந்து, அதற்கேற்றாற்போல் உங்கள் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டுமென்ற அன்பான வேண்டுகோளே இக்கட்டுரையின் அடித்தளம்!
மனிதப் பிறவியின் பல பருவங்களுக்குள், 70-79 வயதுப் பருவமே மிக முக்கியமானதாகவும், அபாயகரமானதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்! இந்தப் பத்து ஆண்டுகள் வயது கொண்டோரை ஆராய்ந்த இஸ்ரேலிய அறிஞர்கள் கூறுவது இதுதான்!
இவ்வயதில் மாதத்திற்கு இரண்டு ஆரோக்கியப் பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளதாம்
முதுமை சார்ந்த நோய்கள் வருமாம்
புதுமாதிரியான சிரமங்களும் ஏற்படுமாம்
தமனி ரத்த உறைவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை அதிகம் வரலாமாம்
இதில் வேடிக்கை என்னவென்றால், இப்பருவத்தைத் தாண்டி 80 வயதில் காலடி பதித்து விட்டால், 60-69 வயதில் இருந்த அளவு சக்தியைப் பெற்று விடலாமாம்!
‘என்னங்க இப்படிப் பயமுறுத்துறீங்க?’ என்று நீங்கள் எண்ணுவது எனக்கும் தெரிகிறது. இது பயமுறுத்தலே அல்ல! பக்குவமான அணுகுமுறைக்கான வழிதான்!
‘சரி! நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? சீக்கிரம் சொல்லித் தொலையேன்!’ என்று நீங்கள் அலுத்துக் கொள்வது புரிகிறது! நீங்க செய்ய வேண்டியது இவற்றைத் தாங்க! ரொம்ப சிம்பிள்ங்க! இரு கை விரல்கள் போல பத்தே பத்துதாங்க! மிகச் சுருக்கமாக அவை கீழே:
1. நீர் குடித்தல்: ஒரு நாளில் மூன்று முறை தேவையான அளவு நீர் பருகுங்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும்; உடற்பயிற்சி செய்து முடித்ததும்; படுக்கச் செல்லும் முன். பல நோய்கள் வராமலே இது தடுக்குமாம்!
2. கஞ்சி-ஒரு கிண்ணம்: தானியக் கஞ்சி குடிப்பதால் 9 சதவீத இறப்பு குறைவதுடன் இதய நோயும் தடுக்கப்படுகிறதாம்! ஒரு லட்சம் பேரை வைத்து 14 ஆண்டுகள் ஆய்வு செய்த ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவு இது!
3. பால்,ஒரு கப்: வெள்ளை ரத்தம் என்றழைக்கப்படும் இதில் கால்சியம், புரதம், நல்ல கொழுப்பு உள்ளன! தினமும் 300 கிராம் அளவில் சாப்பிடலாம்.
4. ஒரு முட்டை: புரதம் அதிகம். 98 விழுக்காட்டு சத்து உடம்பில் சேருமாம்!
5. ஓர் ஆப்பிள்: கொலஸ்ட்ராலைக் குறைத்து உடல் எடையைக்குறைக்கும்; கேன்சரைத் தடுக்கும்; நினைவாற்றலைப் பெருக்கும்; வயதாவதைத் தாமதப்படுத்தும் மற்றும் தோலை மென்மையாக்கும்! சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆப்பிள் எல்லாமே உகந்தவை.
6. ஒரு வெங்காயம்: ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்; கொலஸ்ட்ராலை மட்டுப்படுத்தும்; கேன்சரைத் தடுக்கும்; இதய, மூளை நோய்களைக் கட்டுப்படுத்தும்; நீர்க்கோர்வையைத் தடுக்கும்; எதிர்ப்பாற்றலை வளர்க்கும் இதில், கால்சியம் அதிகம்!வாரத்தில் 3,4 முறை சாப்பிடுக.
7. மீன் ஸ்லைஸ் ஒன்று: அசைவ உணவுக்காரர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம் நான்கு கால்கள் கொண்டவற்றின் மாமிசத்தைக் காட்டிலும் இரண்டு கால்கள் கொண்டவற்றின் இறைச்சி சிறந்ததென்றும் அதையும் விட கால்களே இல்லாத மீனும் காய்கறிகளும் சிறந்தவை என்றும் கூறப்படுகிறது!
8. ஜென்டிலான நடைப்பயிற்சி: தினமும் மிதமான வேகத்தில் ஒரு கிலோ மீட்டர் 12 வாரங்களுக்கு நடந்தால் உறுதியான, கட்டுக்கோப்பான உடலைப் பெறுவதுடன் இடுப்புச் சுற்றளவையும் குறைக்கலாமாம்! தினமும் நடப்பதால் தலைவலி, முதுகுவலி, தோள்வலி, உடற் களைப்பு ஆகியவற்றைப் போக்கி நல்ல உறக்கத்தையும் பெறலாம்!
9. பொழுது போக்கு: பாடல், ஆடல், பெயிண்டிங், பறவைகள் வளர்த்தல், மாடித் தோட்டம், சுற்றுலா செல்லல் என்று ஏதாவது ஒரு பொழுது போக்கில் கவனம் செலுத்துவது சுறுசுறுப்பை நல்குவதுடன் வெளியுலகத் தொடர்பையும் ஏற்படுத்தி உற்சாகம் தரும்!
10. நல்ல மூடில் இருத்தல்: கோப தாப உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல் எப்பொழுதும் மனதைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும். அதிக கோப தாபமே ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், இதய நோய் மற்றும் உடனடி இறப்பு ஆகியவற்றுக்கு அடிகோலும்; ரத்தச் சர்க்கரை அளவையும் அதிகப்படுத்தும். அவற்றைத் தவிர்ப்போமே!
அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து, நூறாண்டுகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்!