

புத்துணர்வு பெறுவதற்காக நாம் டீ குடிப்பதுண்டு; ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும். அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இப்பதிவில் காண்போம்:
1. இரும்புச்சத்து குறைபாடு: அதிகமாகத் தேநீர் குடிப்பதால் நம் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது பாதிக்கப்படுகிறது. டீயிலுள்ள 'டானின்' மற்றும் 'பாலிஃபினால்கள்' உணவிலிருந்து இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ரத்தசோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிக டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து குறைபாட்டால் சோர்வு மற்றும் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.
2. இன்சோம்னியா (தூக்கமின்மை): மாலை வேளைகளில் அதிக டீ குடிப்பதால் தூக்கம் பாதிக்கப்படும்; இதனால் காலையில் எழுந்திருக்கும்போதே உடல் சோர்வாக இருக்கும்.
3. மன அழுத்தம்: தேநீரில் 'கேஃபீன்' சத்து இருப்பதால், அதிக டீ குடிப்பவர்கள் மன அமைதியின்றியும் ஒருவித படபடப்போடும் இருப்பார்கள். இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை அதிகமாக்கும்.
4, வயிறு கோளாறுகள்: வெறும் வயிற்றில் டீ குடிக்கும்போது, அதிலுள்ள 'டானின்கள்' உணவுப்பாதையில் பிரச்சனையை ஏற்படுத்தி வயிறு வீக்கத்தை உண்டாக்கக்கூடும். ஏதாவது உணவு சாப்பிட்ட பிறகு டீ குடித்தால் இத்தகைய சங்கடங்களைத் தவிர்க்கலாம்.
5. நெஞ்செரிச்சல்: சிலருக்கு டீ குடித்த பிறகு நெஞ்செரிச்சல் ஏற்படலாம்; சிலருக்கு அமிலத்தன்மையால் (Acidity) வயிற்றில் சங்கடங்கள் ஏற்படலாம். புளித்த ஏப்பம் மற்றும் தொண்டையில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிக அளவு தேநீர் உட்கொள்வதால் ஏற்படும். ஆகவே, சிறிய அளவில் குடிப்பது நல்லது.
6. தலைவலி: கேஃபீன் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு அதிக அளவு தேநீர் உட்கொள்வதால் தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் அதிக டீ குடிப்பவராக இருந்து, திடீரென்று அதை நிறுத்தினால் தலைவலி ஏற்படும். ஆகவே, படிப்படியாகக் குறைப்பது நல்லது.
7. கேஃபீன் அடிமைத்தனம்: தேநீர் குடிப்பது அபாயமில்லை; ஆனால், அதிக அளவில் குடிப்பதால் நீங்கள் கேஃபீனுக்கு அடிமையாவீர்கள். உங்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையை இது உண்டாக்கும். தலைவலி, அதிக சோர்வு, கவனக்குறைவு போன்றவற்றைத் தேநீரில் உள்ள கேஃபீன் ஏற்படுத்தும்.
8. நீர்ச்சத்து குறைபாடு: தேநீர் அதிக அளவில் குடிப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். டீ அதிகம் குடிப்பவர்கள் போதுமான தண்ணீர் அருந்தாமல் இருந்தால், தாகம் ஏற்படுவதுடன் தொண்டை வறண்டுவிடும்.
9. கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்பமான பெண்கள் தேநீரை அதிகம் குடிக்காமல் இருப்பது நல்லது. அளவாகக் குடிப்பதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.
10. பற்களில் கறை: நீங்கள் அடிக்கடி தேநீர் குடிப்பவராக இருந்தால், டீயிலுள்ள அடர் நிறங்கள் காரணமாகப் பற்களில் கறை ஏற்பட வாய்ப்புண்டு. டீ குடித்த பிறகு வாயைக் கொப்பளிப்பது சிறந்தது.
ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் குடிக்காதீர்கள்.
மாலையில் மிகவும் 'ஸ்ட்ராங்'கான டீ குடிப்பதைத் தவிர்க்கவும்.
வெறும் வயிற்றில் டீ குடிப்பதைத் தவிர்க்கவும்.
உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் டீயைத் தவிர்க்க வேண்டும்.
டீ குடித்த பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)