குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அந்த நோயாளிக்கு இணையாக அவஸ்தைப்படுவது அந்த மொத்த குடும்பமும் தான். உடல் நலம் குன்றியவரும் அவரது குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி குடும்பமே நோய் வாய்ப்பட்டு நிற்கும்.
வயதானவரோ இளையவரோ யாராக இருந்தாலும், நோயின் தன்மை எதுவாக இருந்தாலும், மருத்துவமனையில் இருக்கும் உறவுக்காக அந்த குடும்பம் மொத்தமும் உடலாலும் மனதாலும் படும்பாடு சொல்லிமாளாதது.
நோயின் தன்மையைப் பொறுத்து ஏற்படும் மனக்கஷ்டம் தொடங்கி, எப்போது நலமாகி வீடு திரும்புவார் என்பதில் வந்து நிற்கும். மருத்துவர்களின் விளக்கமும், விளக்கமின்மையும் நம்மைக் குழப்பும். என்ன நோய் எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவர் விளங்கிக்கொண்டு பின்பு விளக்குவார். இதற்குச் சிலகாலம் பிடிக்கும். தற்போதெல்லாம் மருத்துவர்கள் கருவியை நம்பித்தான் மருத்துவத்தை மேற்கொள்கிறார்கள். நமது பாரம்பரிய மருத்துவம் போல நாடி பார்த்து, குடும்பம், பழக்கம் விசாரித்து, நோய் முதல் நாடியை அறிபவர் மிகச்சிலரே.
நமக்கும் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார் என்பது மறந்து போய் வெகுகாலம் ஆகிவிட்டது. எளிய திறமையான ஆரம்பக்கால சிகிச்சை மேற்கொள்வது என்பது கௌரவ குறைச்சல் என்ற அளவுக்கு நமக்கும் பகுத்தறிவும் விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. சிறிய உபாதைக்கும் உயர் சிகிச்சை மருத்துவமனையையே நாடுகிறோம்.
நோயின் ஊற்றுக்கண்ணை அறிந்து பக்குவமான எளிய சிகிச்சையை மேற்கொள்ள நமக்கு அவகாசமும் இல்லை, பொறுமையும் இல்லை, ஞானமும் இல்லை. தாங்கிக்கொள்ளும் பொறுத்துக்கொள்ளும் தன்மையும் குறைந்து விட்டது. நாம் வாழும் சூழல் மேற்கொள்ளும் உணவு, உடல், பழக்க வழக்கங்கள் எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு விரைவான வாழ்க்கைக்குத் தள்ளிவிடுகிறதேயன்றி ஆரோக்கியமான வாழ்வியலுக்கு அல்ல.
வேகமாக உணவு தயாரித்து, வேகமாக உண்டு வேகமாக பிரயாணித்து மீதமான நேரம் எங்கே போகிறது. மருத்துவமனைக்கு இட்டுச்சென்று நோயாளியாக்கி விடுகிறது. சேமித்த நேரமும் சம்பாதித்த பணமும் வேகமாகவே சோகமாகவே கரைந்து விடுகிறது.
மருத்துவமனையில் உடல் குன்றி இருப்பவருக்கு ஏற்ற வகையில் குடும்ப உறுப்பினர்களின் நேர கால அவகாசங்களும் மாற்றம் காண்கிறது. அவர் உடன் இருக்க ஒருவரும் உடன் இருப்பவரின் தேவையை கவனிக்க மற்றவர்களும் தங்களது அன்றாட அலுவல்களை மாற்ற வேண்டி வருகிறது.
சிறப்பு மருத்துவர் வரும் நேரத்தில் அங்கே இருந்து அவர் உதிர்க்கும் ஒன்று அல்லது ஒன்றரை வார்த்தைகளை கேட்டு, அதற்கு அர்த்தமும் நோக்கமும் தெரியாமல் திணறி, அவருடன் வரும் குட்டி தேவதைகளின் துணை நாடி, விளக்கம் பெற்று செயல்பட வேண்டும். நோயுற்று இருப்பவரை விசாரிக்கவரும் (இப்போதெல்லாம் whatsupலும் போனிலும் தான் பெரும்பான்மை விசாரிப்புகள்) தேவைகளை சமாளிக்க பிரயத்தனப்பட்டு, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் தினந்தோறும் அலைந்து கவனிக்க சென்றவர் நோயாளியாவது தான் மிச்சம்.
நேரம், மனநிம்மதி, பணம் என்று மொத்தத்தையும் கரைத்த பிறகும் திருப்தி ஏற்படாத நோயுக்கும், மருத்துவமனைகளுக்கும் இங்கு பஞ்சம் இல்லை. மருத்துவரையும் குறை சொல்ல முடியாது தான். இப்போதைய நோய்களின் தன்மையும் நோயாளியாக அனுமதிக்கப்படும் வரை நோயின் முற்றிய தன்மையும் மருத்துவர்களை திணறடிக்கத்தான் செய்கிறது. சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படுத்தும் பக்க, எதிர்பக்க, பின்பக்க, முன்பக்க விளைவுகளும் மேலும் சிக்கலை கூட்டுகின்றன. எதை எடுப்பது எதை விடுவது என்று தவித்து போகிறார் மருத்துவர். சிக்கலாகி போன வாழ்க்கைபோல நோயின் தன்மையும் வெவ்வேறு ரூபங்கள் எடுக்கின்றன.
மருத்துவமனைக்குள் நுழைந்து விட்டால் முடிவுகள் என்பது வேகமாகவும் சூழல் மற்றும் மருத்துவமனையின் அவசரங்கள் சார்ந்தும் எடுக்கப்படுகிறது. மாற்று வழிகளை யோசிக்க நேரம், காலம், நிபுணத்துவம், வழிகாட்டல் எல்லாம் தொலைந்து போய் விடுகிறது. சூழ்நிலை கைதியாகி கடல் அலையின் ஓட்டத்திற்கு தகுந்த மாதிரி செல்ல வேண்டிய தருணமாகிறது.
அதனால் தான் நம் பெரியவர்கள் சிறந்த செல்வமாக ஆரோக்கியத்தை கருதினார்கள். ஆரோக்கியம் பேணுவதற்கு நேரம், பணம், அறிவு, ஒழுக்கம் ஆகியவை அவசியம். அவசரமோ, புற சஞ்சலங்கலோ, மோகமோ தடையாக இருக்க கூடாது. நேர்மையான வாழ்க்கை என்பது ஒழுக்கமாக ஆரோக்கியமாக வாழ்வதை உள்ளடக்கியது தான் என்ற புரிதலும் செயல்பாடும் இருந்தால் இது சாத்தியமே.