நோயின்றி வாழ வைக்கும் சீந்தில் டீ!

Giloy Tea Benefits
Giloy Tea Benefits

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. உடல் பிரச்னைகளைத் தீர்க்கும் Giloy எனப்படும் சீந்தில் செடியைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதைப் பயன்படுத்தி செய்யப்படும் டீயை தினசரி பருகுவதால், பல ஆரோக்கிய நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது.

பொதுவாகவே, இந்த சீந்தில் செடியை, ‘ஆரோக்கியத்தின் அமிர்தம்‘ எனக் கூறுவார்கள். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டிபயாட்டிக் தன்மை, சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதேசமயம், வயது முதிர்வையும் குறைக்கிறது என்கின்றனர். இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் இதை டீ, சாரு அல்லது பொடி வடிவில் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

சீந்தில் டீ செய்முறை: இந்த டீ தயாரிக்க சீந்தில் இலை மற்றும் தண்டுகளை நன்றாகக் கழுவி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் அவற்றை நன்கு இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்தால் சீந்தில் டீ ரெடி. இதை மேலும் ஆரோக்கியமாக்க துளசி, கிராம்பு, மஞ்சள் போன்றவற்றை இதில் சேர்த்துக் கொள்ளலாம். சில நாட்டு மருந்து கடைகளில் சீந்தில் பொடி கிடைக்கும். அதை அப்படியே நேரடியாக தண்ணீரில் கொட்டி டீ போட்டும் குடிக்கலாம்.

ஆரோக்கிய நன்மைகள்: தினசரி சீந்தில் டீ குடிப்பதால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பருவ கால நோய்களான சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்தும். இது ரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சீந்திலில் வயது முதிர்வின் பிரச்னைகளை எதிர்க்கும் பண்புகள் காணப்படுவதால், தினசரி இந்த டீயை குடித்து வந்தால், சரும பிரச்னைகள் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகள் குறையும்.

மலச்சிக்கல், வயிற்று உபாதை, செரிமானமின்மை போன்ற பிரச்னை உள்ளவர்கள் இதை தாராளமாக உட்கொள்ளலாம்.

உடலின் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் சீந்தில் டீ குடிப்பது நல்லது.

இந்த இயற்கை மூலிகை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றாலும், இதை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. ஏனென்றால், எந்த உணவாக இருந்தாலும் அது அனைவருக்குமே சரிப்பட்டு வரும் என சொல்ல முடியாது. உங்கள் உடலில் எந்த பிரச்னைகளும் இன்றி ஆரோக்கியமான நபராக இருந்தால், தினசரி இந்த டீ குடிப்பதால் பல நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com