நம் உடலில் சில நேரங்களில் திடீரென தோலில் சில வளர்ச்சிகள் தோன்றும். அத்தகைய சரும வளர்ச்சிகளில் ஒன்றுதான் அக்ரோகார்டன் (Acrochordon). இது பொதுவாக நம் அழகை பாதிக்கக்கூடியது என்றாலும், இதனால், ஆபத்துக்கள் இல்லை. இது எதனால் உண்டாகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை.
அக்ரோகார்டன் என்பது தோலின் மேற்பரப்பில் தோன்றும் சிறிய மென்மையான இறைச்சி வளர்ச்சியாகும். இது பொதுவாக தோலின் நிறத்திலோ அல்லது சற்று கருமை நிறத்திலோ இருக்கும். இது பொதுவாக கழுத்து, அக்குள், இடுப்பு போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும். இது வலி இல்லாதது என்பதால், எந்த தொந்தரவையும் ஏற்படுத்தாது.
இந்த தசை வளர்ச்சி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வயது அதிகரிக்கும்போது தோல் தளர்வதால் இவை உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த சரும வளர்ச்சி அதிகமாகக் காணப்படும். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்களுக்கு இது ஏற்படலாம்.
உடலில் போதிய அளவு இன்சுலின் உற்பத்தி ஆகாதபோது சருமத்தில் இவை உண்டாகும். குடும்ப ரீதியாக அக்ரோகார்டன் உள்ளவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தோல் தொடர்ச்சியாக உராய்வுக்கு உள்ளாகும் பகுதிகளில் இவை உருவாகலாம். இதில் மொத்தம் இரண்டு வகைகள் உண்டு. தனித்தனியாக ஆங்காங்கே தோன்றும் அக்ரோகார்டன். மற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றும் அக்ரோகார்டன்.
சிகிச்சை: பெரும்பாலான நேரங்களில் இதற்கு சிகிச்சை தேவையில்லை. இது ஆரோக்கியத்திற்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும் அழகியல் காரணங்களுக்காக இதை நீக்க விரும்பினால், அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம். அல்லது இதை உறைய வைத்து அழிக்க முடியும். லேசர் சிகிச்சை மூலமாகவும் இதை முற்றிலுமாக அழிக்கலாம்.
ஒருவருக்கு அக்ரோகார்டன் வருவதைத் தடுக்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் அதன் வளர்ச்சியைக் குறைக்க முடியும். தினசரி பழங்கள், காய்கறிகள், நார்சத்துகள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். உடல் எடையைக கட்டுப்படுத்துவதன் மூலம் இவை உருவாகும் வாய்ப்பை குறைக்கலாம். சருமத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருந்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள். மேலும், வெளியே செல்லும்போது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.