ஆஸ்துமா என்பது நீண்ட காலமாக நீடித்திருக்கும் ஒரு நுரையீரல் நோயாகும். இது காற்றுப்பாதைகளில் வீக்கத்தை உண்டாக்கி, மூச்சுத் திணறல், இருமல், மார்பு இறுக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதேபோல, உடற்பருமன் என்பது அதிக எடையுடன் இருக்கும் நிலை. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
ஆஸ்துமா மற்றும் உடற்பருமன் இரண்டுமே ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனைகள். இவை உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கின்றன. சில ஆய்வுகள், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளன. அவை என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமா மற்றும் உடற்பருமன் இடையேயான தொடர்பு:
அதிக உடல் எடை, மார்பு மற்றும் வயிற்றில் அழுத்தத்தை அதிகரித்து, காற்றுப்பாதைகளை சுருக்கி, மூச்சு விடுவதை கடினமாக்கும். இது ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும். மேலும், அதிக உடல் எடையானது நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் பெறுவதைக் கடினமாக்கி, நுரையீரல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உடற்பருமன் உள்ளவர்கள் தூசி, புகை மற்றும் வேதிப்பொருட்கள் போன்ற பொருட்களால் அழற்சியை எதிர்கொண்டு ஆஸ்துமா பாதிப்புகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஆஸ்துமாவினால் உடற்பயிற்சி மற்றும் பிற வகையான உடல் செயல்பாடுகள் செய்ய முடியாமல் போவதால், உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
சிலர் ஆஸ்துமாவுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். இதனால்தான் ஆனந்த் அம்பானியும் உடல் பருமனால் அவதிப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு ஆய்வில், ஆஸ்துமா உள்ளவர்களின் உடற்பருமன் விகிதம் ஆஸ்துமா இல்லாதவர்களை விட 27 சதவீதம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர். மற்றொரு ஆய்வில் உடற்பருமன் கொண்ட ஆஸ்துமா நோயாளிகளுக்கு, ஆஸ்துமாவின் தாக்குதல் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது எனவும், அவர்களுக்கு ஆஸ்துமா மருந்துகள் பலனளிக்காமல் போகலாம் என்றும் கண்டறியப்பட்டது.
எனவே, ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்களும் உடல் எடை அதிகரிக்ககூடும். அதேபோல, உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலமாக ஆஸ்துமாவும் உடற்பருமனுக்கும் இடையே உள்ள தொடர்பு நமக்குத் தெரிய வருகிறது.