பூச்சிகளில் சிறிய வகை பூச்சிகளால் அதிக ஆபத்து இல்லை என்றாலும், அவை நம்மைக் கடித்துவிட்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற அதிக பயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, மூட்டைப்பூச்சிகள் வீட்டில் சர்வ சாதாரணமாக சுற்றித்திரியும். அவை வீட்டில் உள்ள விரிசல்கள், பிளவுகள் மற்றும் சோபா, மெத்தைகள் போன்ற பல இடங்களில் மறைந்து நமக்கு தொந்தரவைக் கொடுக்கலாம்.
ஒருவரை மூட்டைப்பூச்சி கடித்துவிட்டால் எதற்கும் பயப்படாமல் உடனடியாக ஐஸ் பேக் போடுங்கள். அதாவது கடிபட்ட இடத்தில் ஐஸ்கட்டி வைத்து தடவுங்கள். அல்லது வீட்டில் அரிப்பு எதிர்ப்பு கிரீம் அல்லது லோஷன் இருந்தால் பயன்படுத்தலாம். இந்த பூச்சி கடிப்பதால் ஏற்படும் அரிப்பு மற்ற நோய்களைப் போல ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவாது. இந்த பூச்சிக்கடியால் உடலின் தோல் சிவப்பு நிறத்தில் அழற்சியை உண்டாக்குகிறது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், அரிப்பு காரணமாக இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று ஏற்பட்டு காயம் பெரிதாக வாய்ப்புள்ளது.
மூட்டைப்பூச்சி கடியை வீட்டு வைத்தியம் மூலமாகவே குணப்படுத்த முடியும். எனவே, இதற்கு சில வீட்டு வைத்திய முறைகளையும் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல் நூற்றுக்கும் அதிகமான மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. எனவே, உங்களை மூட்டைப்பூச்சி கடித்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த ஜெல்லை பயன்படுத்துங்கள். இதில் நிறைந்துள்ள அமினோ அமிலங்கள் சருமத்திற்கு குளிர்ச்சியைக் கொடுத்து அரிப்பையும், எரியும் உணர்வையும் கட்டுப்படுத்த உதவும்.
அடுத்ததாக, மூட்டைப்பூச்சி கடித்த உடன் வீட்டில் உள்ள பற்பசையைக் கூட பயன்படுத்தலாம். இதனால் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மூட்டைப்பூச்சி கடி சிகிச்சைக்கான சிறந்த தீர்வுகளில், சமையல் சோடா + தண்ணீரும் ஒன்றாகும். ஏனெனில், இது நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடியது. இவை இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்துங்கள். அல்லது உங்கள் வீட்டில் எப்போதும் எலுமிச்சம்பழம் இருக்கும் என்றால், அதைக் கூட கடிபட்ட இடத்தில் தேய்க்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தினாலும் கடிபட்ட இடத்தில் அரிப்பு எரிச்சல் குறையும். இதை ஒரு பருத்தித் துணியில் கொஞ்சமாக எடுத்து சில நிமிடங்கள் கடித்த இடத்தில் தடவ வேண்டும்.
மூட்டைப்பூச்சி கடியினால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், அதனால் ஏற்படும் அரிப்பு உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இது சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை கூட இருக்கலாம். மூட்டைப்பூச்சியின் கடி மிகத் தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், அவற்றிடமிருந்து கடிபடாமல் இருக்க வீட்டையும், வீட்டின் படுக்கை, சோபாக்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.