மழைக்காலங்களில் எரிபூச்சி (blister beetle) நம் வீட்டிற்குள் வரக்கூடும். மின் விளக்குகளை சுற்றிலும் இருக்கும். தோட்டம், புல்வெளிகள், செடி கொடிகள் இருக்கும் இடத்திலும் இவை இருக்கும். எரிபூச்சி கடித்தால், அந்த இடம் கன்றி சிவந்து மிகுந்த வலியையும் அரிப்பையும் உண்டாக்கும். இது முதுகு, முகம், கை கால்கள் என்று எந்த இடத்தில் வேண்டுமானாலும் கடிக்கக் கூடும்.
சிகிச்சை: பூச்சி கடித்த இடத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி ஈரத்தை மென்மையாக ஒத்தியெடுக்கவும். மருத்துவர் கொடுத்த ஆயின்மெண்டை கடிபட்ட இடத்தில், காது சுத்தம் செய்யும் காட்டன் பட்டால் (bud) தடவி விட வேண்டும். இதனால் மேலும் தொற்று பரவாமல் காப்பாற்றலாம். குளிக்கும்போது அந்த இடத்தில் சோப் போடக் கூடாது. வலி அதிகமாக இருக்கும் நேரங்களில் ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து சுற்றி ஒத்தடம் கொடுத்தால், வலி குறையும். ஐந்தாவது நாள் முற்றிலும் குணமாகிவிடும்.
பூச்சி கடிக்காமல் தடுக்க: மின் விளக்கிற்கு நேர் கீழே உட்காரவோ, தூங்கவோ வேண்டாம். இரவில் கைகளை முழுக்க மூடிய, முழுக்கை சட்டை அணிந்து உறங்கவும். அதேபோல தளர்வான பேண்ட் அணிந்து கொள்ளலாம். அப்படியும் உடல் மேல் எரிபூச்சி வந்து அமர்ந்து விட்டால், அதை அப்படியே நசுக்காமல், மென்மையாக ஒரு குச்சியை வைத்து எடுத்து வெளியே எறிந்து விடலாம். அல்லது டாய்லெட்டில் போட்டு பிளஷ் அவுட் செய்து விடலாம்.