எப்படி சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ? அதே அளவிற்கு, எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமான ஒன்று. அந்தவகையில் சாப்பிடும் நேரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல்நலத்தின் மீதும் ஃபிட்னஸ் மீதும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். அதிலும் சினிமா பிரபலம் ஒரு விளையாட்டு வீரரை திருமணம் செய்துக்கொண்டால், உடல் ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்தான். அந்தவகையில் அனுஷ்கா ஷர்மா ஒரு பேட்டியில் அவரும் அவர் கணவர் விராட் கோலியும் சாப்பிடும் நேரத்தை கூறியிருக்கிறார்.
அதாவது அனுஷ்கா ஷர்மா இரவு 6.30 மணிக்கே இரவு உணவை சாப்பிட்டுவிட்டு 9.30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம் என்று கூறினார். இதேபோல்தான் அக்ஷய் குமாரும் செய்வதாக கூறினார்.
இதன் ரகசியம் என்ன?
மாலை 6 முதல் 8 மணி வரை அல்லது தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மாலை 6-8 மணிக்குள் உழைக்கும் மக்கள் உணவு உண்பது கடினமாக இருக்கலாம் என்றும், அத்தகைய சூழ்நிலையில் தூங்குவதற்கு குறைந்தது 3 மணி நேரமாவது உணவு உண்ண வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாம் சாப்பிடுவதை நினைவூட்டும் ஒரு கடிகாரம் சூரிய மறைவு. அதாவது இதனை உடலுக்குள் இருக்கும் சர்காடியன் இசைவுடன் (Circadian Rhythm) ஒப்பிடப்படுகிறது. சுருக்கமாக புரியும்படி சொன்னால், இந்தந்த நேரத்தில் உடலில் இப்படியெல்லாம் நடக்கும் என்பதன் குறிப்புதான் இந்த Circadian Rhythm. அதற்கேற்றவாருதான், நாமும் நேரத்திற்கு உண்ண வேண்டும் தூங்க வேண்டும். இந்த உயிரியல் கடிகாரம் பழுதடையும்போது, அதன் 'சர்காடியன் ரிதம்' மாறும்போதும் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றன ஆய்வுகள்.
இதன்படி, சூரிய ஒளி மறைவிற்கு முன் சாப்பிட்டால், செரிமானத் தன்மை செவ்வனே தனது வேலையை செய்யுமாம். போதுமான நல்ல உறக்கமும், மன ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அதேபோல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுபாடுடன் இருக்கும்.
தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், நடப்பதற்கு நேரமிருக்காது. இது செரிமானத்தை பாதிக்கிறது. உணவு சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், அது கொழுப்பு படிவு வடிவத்தில் உங்கள் உடலில் சேரத் தொடங்குகிறது. இதுவும் உங்கள் உடல் பருமனை அதிகரிக்கிறது. அதே சமயம், இரவில் தாமதமாக உணவை உட்கொள்வதால், உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாக வேலை செய்யாது என்றும், வளர்சிதை மாற்றம் வேலை செய்யாதபோது, அது கலோரிகளை எரிக்காது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுதான் உடல் எடை அதிகமாக காரணமாகிறது.