கொசுகள் மற்றும் அவை பரப்பும் நோய்கள் வரலாற்றில் நடந்த பல போர்களை விட அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினமாக கொசுகள் கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
மனித உயிரிழப்புகளுக்கு காரணமான உயிரினங்களில் கொசுகள் இரண்டாம் இடத்தில் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து பாம்புகள், நாய்கள், முதலைகள், யானைகள், சிங்கங்கள், ஓநாய்கள், நீர்யானைகள், சுராமீன்கள் போன்றவை வரிசையாக உள்ளன.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் உலக நோய் பரப்பிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் முக்கிய கவனம் கொசுக்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில்தான் செலுத்தப்பட்டுள்ளது.
கொசுகள் பரப்பும் நோய்கள்
கொசுகள் பலவிதமான ஆபத்தான நோய்களை பரப்பக்கூடியவை. அதில் வெஸ்ட் நைல் காய்ச்சல், டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்கன்குனியா, மூளை அழற்சி போன்றவை முக்கியமானவை. ஆனால், கொசுகள் எல்லோரையும் சமமாக கடிப்பதில்லை. சிலரை அதிகம் கடிக்கின்றன, சிலரை மிகக் குறைவாக அல்லது கடிப்பதே இல்லை. இதற்கான காரணங்களை அறிவியல் கூறுகிறது.
பெண் கொசுக்களுக்கு இனப்பெருக்க சுழற்சியை முடிக்க மனித ரத்தம் தேவைப்படுகிறது. அதாவது, முட்டைகளை உருவாக்க தேவையான ஊட்டச்சத்துக்களை பெற ரத்தம் அவசியம். ஆனால், யாரை கடிப்பது என்பதை கொசுகள் சில உடல் மற்றும் வேதியியல் அடிப்படையிலான காரணங்களை வைத்தே தீர்மானிக்கின்றன.
மனிதர்களின் உடல் வெப்பம், ஈரப்பதம், மற்றும் வியர்வை மூலம் வெளிப்படும் வாசனை குறிப்பாக லாக்டிக் அமிலம் மற்றும் பிற வேதிப்பொருட்களின் வாசனைகள் கொசுகளை ஈர்க்கும் முக்கிய காரணிகள். சில நபர்களின் தோலில் இந்த வாசனைகள் அதிகம் காணப்படுவதால், ஒரு சிலரை மட்டும் அதிகமாக கொசுக்கள் கடிக்கின்றன.
கொசுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் சாதாரணவை அல்ல. உலகளவில் மனித உயிர்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய தொற்றுகள் இவற்றின் மூலம் பரப்பப்படுகின்றன. எனவே, கொசுக்களை கட்டுப்படுத்துவது என்பது தனிநபர் மட்டுமின்றி சமூக, தேசிய மற்றும் உலகளாவிய பொறுப்பாக மாறியுள்ளது. நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தல், நீர்தொட்டிகளை மூடிவைத்தல் போன்ற கொசு ஒழிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது நோய்களின் பரவலை தடுக்கும் ஒரு முக்கியமான படியாக அமையும்.