‘அல்சைமர்’ மறதி நோய் பெண்களை அதிகம் தாக்குவது ஏன்?

‘அல்சைமர்’ மறதி நோய் பெண்களை அதிகம் தாக்குவது ஏன்?
Published on

முதுமையில் மறதி என்பது இயற்கை. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் பெயர்களை மறந்து போவது, அவர்களை அடையாளம் கண்டு கொள்ளமுடியாத நிலை, வெளியில் சென்று விட்டு தன் பெயர், வீட்டு முகவரியை மறந்து வீடு திரும்ப முடியாத சிக்கல் போன்றவையே, ‘அல்சைமர்’ நோயின் விளைவுகள். அறுபது வயதுக்கு மேல் இது ஆண்களை விட, பெண்களையே அதிகம் தாக்குகிறது.

அல்சைமர் நோய் பெண்களை அதிகம் தாக்குவதன் காரணம்:

1. பெண்களின் உடலில் இருக்கும் குரோமோசோம்கள், ஹார்மோன்கள் மற்றும் மூளையின் அமைப்பு ஆண்களைப் போல் இல்லாமல் மாறுபட்டு இருப்பது.

2. மிக இளம் வயதிலேயே பூப்படைதல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஈஸ்ட்ரஜன் மாறுபாடுகள் மற்றும் மாதவிலக்கு நிற்றல் போன்ற காலகட்டங்களில் பெண்களின் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாறுபாடுகள்.

3. சத்தற்ற உணவுகளை உட்கொள்வது, காலை உணவைத் தவிர்த்தல், குடும்பத்தினருக்கு பார்த்து பார்த்து உணவு தயாரித்து கொடுத்து விட்டு, மிச்சம் மீதி இருப்பவற்றை உண்பது.

4. பெண்கள், ஆண்களை விட அதிக காலம் உயிரோடு இருக்கிறார்கள். அதனால் தன் நீண்ட கால வாழ்நாளில் பிற நோய்களோடு சேர்த்து இந்நோயையும் எதிர்கொள்கிறார்கள்.

5. ஆண்களுக்கு வெளியில் சென்று சம்பாதிப்பது மட்டுமே முக்கிய கடமையாக இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகளும், சுமைகளும் அதிகம். சமையல், குடும்பப் பராமரிப்பு, பிள்ளை வளர்ப்பு, உறவுகளைப் பேணுதல், போன்றவை பெண்களை மையம் கொண்டே இயங்குகின்றன. இதனால் எளிதில் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

6. ஆண்களைப் போல இவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. உடற்பயிற்சி செய்வதில்லை.

7. குறைந்த அளவு நேரமே உறங்குகிறார்கள். ஆண்களை விட பெண்களே அதிக நேரம் உறங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆழ்ந்த உறக்கம் மூளையில் உள்ள தேவையில்லாத நினைவுகளை டாக்ஸின்களையும் அழித்து மூளைக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

8. குடும்பம் என்ற வட்டத்தில் சிக்கிக்கொண்டு தனக்கான ஸ்பேஸ் எடுத்துக்கொள்ளாதது. குடும்பத்துக்காக தனக்கு பிடித்த வேலையை விடுவது, பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடமுடியாமல் போவது போன்றவை பெண்களுக்கு உற்சாகமற்ற மனநிலையை உருவாக்குகிறது.

இதுபோன்ற காரணங்களால் பெண்கள் அல்சைமர் நோய்க்கு ஆளாகி, அன்றாட வாழ்வில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பொருள்களை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு வேறு இடத்தில் தேடுவது, சமைக்கும்போது உணவுப் பொருட்களை மாற்றிப் போடுவது, ஃப்ரிட்ஜை திறந்து வைத்து விட்டு என்ன எடுக்க வந்தோம் என்று மறந்து போவது, அடுப்பில் பால் வைத்த நினைவின்றி வேறு வேலையில் ஈடுபடுவது, புதியவற்றை கற்றுக்கொள்வதில் சிக்கல் போன்றவை இந்நோயின் தொடக்க நிலை அறிகுறிகள். வைட்டமின் சி, டி, இ, ஒமேகா 3 கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு, முறையான உடற்பயிற்சி, ஆழ்ந்த உறக்கம், மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவற்றுடன் நிறைய புது விஷயங்களையும் கற்றுக்கொண்டால் இதுபோன்ற மறதி நோயைத் தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com