குளிர்காலம் வந்தால் சளி, இருமல் போன்ற நோய்கள் வருவது வழக்கமாக இருந்தாலும், சில சமயங்களில் இது நிமோனியா போன்ற தீவிர நோயாக மாற வாய்ப்புள்ளது. நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோய். குறிப்பாக, குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால், நிமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
நிமோனியாவின் முக்கிய அறிகுறிகள்:
காய்ச்சல்: நிமோனியாவின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று காய்ச்சல். இதனால், உடல் வெப்பநிலை 100.4°F (38°C) அல்லது அதற்கு மேல் இருக்கும்.
இருமல்: இருமல் என்பது நிமோனியாவின் மற்றொரு முக்கிய அறிகுறி. இந்த இருமல் சாதாரண இருமலை விட அதிகமாகவும், சளி அல்லது சீழ் கலந்தும் இருக்கும்.
மூச்சு விடுவதில் சிரமம்: நிமோனியா நுரையீரலை பாதிப்பதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இது சாதாரண வேலைகளை செய்யும் போது கூட உணரப்படலாம்.
நெஞ்சு வலி: சிலருக்கு இதனால் நெஞ்சில் வலி ஏற்படலாம். இந்த வலி இருமும் போது அதிகமாக உணரப்படும். இத்துடன், தசை வலி, தலைவலி, குளிர் மற்றும் வியர்வை போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
சோர்வு மற்றும் பசியின்மை: நிமோனியாவால் உடல் பலவீனமடைந்து, சோர்வு, பசியின்மை போன்றவை ஏற்படலாம்.
நிமோனியா ஏன் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது?
குளிர் காலத்தில் மக்கள் பொதுவாக வீட்டிற்குள் இருப்பதால், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ஒருவருக்கொருவர் எளிதாகப் பரவுகின்றன. குளிர்காலத்தில் வீட்டிற்குள் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இதனால் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நீண்ட நேரம் உயிர்வாழ்கின்றன. குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால், நோய்த்தொற்றுக்கு எதிர் தாக்குதல் குறைவாக இருக்கும். நிமோனியா பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும் போது காற்றில் நுண்ணுயிரிகள் வெளியாகின்றன. இந்த நுண்ணுயிரிகள் மற்றவர்கள் மூச்சு விடும்போது அவர்களின் உடலுக்குள் சென்று நோயைப் பரப்புகின்றன.
நிமோனியாவை தடுப்பது எப்படி?
சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவது நோய்த்தொற்றை தடுக்க உதவும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். இன்ஃப்ளூயன்சா மற்றும் நியூமோகாக்கல் தடுப்பூசிகள் நிமோனியாவைக் கட்டுப்படுத்தும் . புகைபிடித்தல் நுரையீரலை பாதித்து, நிமோனியா வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே அதை நிறுத்துவது நல்லது. ஆரோக்கியமான உணவு உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்கு எதிர்த் தாக்குதல் அளிக்கும்.
நிமோனியா என்பது தீவிரமான நோய். ஆனால், சரியான சிகிச்சை பெற்றால் முற்றிலும் குணமடையலாம். குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நிமோனியாவை தடுக்கலாம்.