
யாரெல்லாம் புஷ்பா 2 திரைப்படம் பார்த்து விட்டீர்கள்? இந்தத் திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் தோள்பட்டை ஒரு பக்கமாக தூக்கி இருக்கும். திரைப்படத்தில் ஒரு ஸ்டைலுக்காக அதை வைத்திருப்பார்கள். ஆனால், அவ்வாறு தோள்பட்டை தூக்கி இருக்கும் படியான ஒரு நோய் ஒன்று உள்ளது.
நமது உடலின் மையம் என்றால் அது முதுகெலும்புதான். இது நம் உடலை நிமிர்ந்த நிலையில் வைத்திருக்க உதவுவதோடு நம் மூலையில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு சிக்னல்களை எடுத்துச் செல்லும் நரம்புகளைப் பாதுகாக்கிறது. ஆனால் சில சமயங்களில் இந்த முதுகெலும்பு நேராக இல்லாமல் வளைந்து விடுகிறது. இந்த நிலை ஸ்கொலியோசிஸ் (Scoliosis) எனப்படுகிறது.
இந்த பாதிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடும். சிலருக்கு பிறவியிலேயே இருக்கும், ஒரு சிலருக்கு வளரும் வயதில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் காணும். இது ஏற்படுவதற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் கண்டறியப்படவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இது ஏற்படலாம். ஆனால், இது வளரும்போது குழந்தைகளுக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
பிறவியிலேயே முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள் இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தலாம். சில நரம்பு மற்றும் தசைக் கோளாறுகள் முதுகுத்தண்டின் வளர்ச்சியை பாதித்து முதுகு வளைவை ஏற்படுத்தும். மரபணு ரீதியாக சில குடும்பங்களில் இந்த பிரச்சனை இருந்தால், அதைச் சார்ந்தவர்களுக்கு முதுகுத்தண்டு வளைவு ஏற்படலாம். ஆனால், இது ஏன் ஏற்படுகிறது என்பதை துல்லியமாகச் சொல்லிவிட முடியாது.
முதுகுத்தண்டு வளைவின் அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு புஷ்பா போல ஒரு தோல் மற்றொன்றை விட உயரமாக இருக்கும். ஒரு சிலருக்கு இடுப்பு வளைந்து காணப்படும். உடல் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பது, முதுகு வளைவு, தோள்பட்டை இறக்கம் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
இந்த நோயைக் கண்டறிய மருத்துவர் உடல் பரிசோதனை, எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளைச் செய்யலாம். பின்னர் அதன் தீவிரத்தை பொறுத்து எத்தகைய சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யப்படும். இதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு உடற்பயிற்சிகள் போன்றவை போதுமானதாக இருக்கும். அதிகப்படியான முதுகு வரவிற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
லேசாக முதுகு வளைவு இருந்தால் அது எவ்விதமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. ஆனால் சிலருக்கு அதிகமாக வளைந்திருக்கும். இதனால் வலி, மூச்சு விடுவதில் சிரமம், இதயப் பிரச்சினைகள், நரம்புப் பிரச்சனைகள் போன்றவை உண்டாகும்.