

நோய்க்கிருமிகள் உலகில் உலாவிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் எல்லோரும் செருப்பு அணிந்து நடப்பது என்பது முக்கியமான நடைமுறையாக இருக்கிறது. நாம் காலில் செருப்பு அணிந்து நடப்பதால் நம்முடைய கால்கள் கீழே கிடக்கும் கற்கள், முள்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், மற்றவர்கள் கீழே துப்பிய எச்சில் ஆகியவற்றிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. செருப்பு அணிவதால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் முக்கியமாக செருப்பு அணிய வேண்டும்!
சுகர் என்று சொல்லக்கூடிய இந்த நீரிழிவு நோய் உள்ள எல்லோரும் கட்டாயமாகச் செருப்பு அணிய வேண்டும். ஏனென்றால், இவர்கள் செருப்பு அணியாமல் சாலைகளில் நடந்தால் ஏதாவது கல், பீங்கான் போன்ற கூர்மையான பொருள்கள் காலில் குத்தினால், அந்த புண்கள் விரைவில் ஆறாது என்பது குறிப்பிடத்தக்கது.
நீரிழிவு நோயாளிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் செருப்பு கட்டாயம் அணிய வேண்டும். அப்படி அணியாமல் வெளியே சென்றால் பின் விளைவுகளை பெரிதாக சந்திக்க நேரிடும்.
தோல் செருப்புகளைப் பயன்படுத்துவது சிறந்தது!
தோலினால் செய்யப்பட்ட செருப்புகளை நாம் வாங்கி அணிந்தால் அவை நம்முடைய உடல் சூட்டை தணித்து பாதங்களுக்கு நல்ல குளிர்ச்சியை தருகின்றன. இதனால், கோடைக் காலங்களில் ரோடுகளில் நடக்கும் போது, வெப்பம் நம்மால் அந்த அளவுக்கு உணர முடியாது என்பது உண்மையாகும்.
ரப்பர் செருப்புகளைப் பயன்படுத்த வேண்டாம்!
ரப்பர் செருப்புகளை நாம் பயன்படுத்தும் போது, அவை கோடை காலங்களில் வெப்பத்தை உள்வாங்கி வைத்துக் கொள்கிறது. இதன் மூலம் செருப்பிலிருந்து நம்முடைய பாதத்துக்கு வெப்பம் பரிமாற்றம் அடைகிறது. இதனால் நம் உடல் வெப்பமடைகிறது. இதன் மூலம் நமக்கு உடலில் ஏதாவது கொப்பளங்கள், வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. மழைக்காலங்களில் இந்த ரப்பர் செருப்பை அணிந்து கொண்டு வெளியே செல்லும்போது சில இடங்களில் வழுக்கி கீழே விழுந்து பல விபத்துக்கள் ஏற்பட்டு எலும்பு முறிவு கூட ஏற்படுகிறது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆகையால் ரப்பர் செருப்புகளைப் பயன்படுத்தாமல் இருப்பது சாலச் சிறந்ததாகும்.
வீட்டிற்குள் நடப்பதற்கு தனிச்செருப்பு வேண்டும்!
இப்பொழுது எல்லோரும் வீட்டில் 'டைல்ஸ்' என்ற வனையோடுகளை பயன்படுத்தி வருகிறோம். இவை வீட்டின் தரைகளை எப்பொழுதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்கின்றன.
இந்த குளிர்ந்த நிலையில் உள்ள டைல்ஸ் மீது செருப்பு போடாமல் நடந்தால், நமது பாதங்களில் குதிகால் வலி ஏற்படும். இதனால் நாம் எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும். வீட்டிற்குள் நடப்பதற்கு தனிச்செருப்பைப் பயன்படுத்தினால் குதிகால் வலியில் இருந்து நம் கால்களை பாதுகாக்க முடியும் என்பது திண்ணம்.
உங்களுடைய செருப்பை மட்டும் நீங்கள் அணிய வேண்டும்!
செருப்பு அறுந்து விட்டால் புதிதாக செருப்பை கடையில் வாங்கி அணியுங்கள். அதற்காக, மற்றவர்களின் செருப்பைக் காலில் அணிந்து கொண்டு செல்வது என்பது அவர்களிடம் இருக்கும் நோய்க்கிருமிகளை இலவசமாக வாங்குவதற்குச் சமமாகும். இவ்வாறு மற்றவர்களின் செருப்பை நாம் அணிந்தால் அவர்களிடம் உள்ள நோய் தொற்று, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக ஏற்படும் அபாயம் உண்டாகும். ஆகையால், நாம் நம்முடைய செருப்பை மட்டும் அணிவது நல்ல பலனை நமக்குத் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)