கொத்தமல்லி இலையில் இயற்கையாகவே வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், தயமின், நியாசின், பொட்டாசியம், சோடியம் போன்ற கனிமச் சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளதால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
மிக எளிதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கக்கூடிய கொத்தமல்லி இலைகளை தினந்தோறும் அரைத்து முகத்தில் பூசுவதால் முகத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்கள் மறையும். கொத்தமல்லி இலையை அரைத்து கண்ணுக்கு மேலே பூசும்போது கண் பிரச்னைகள் குணமடைகின்றன. அத்துடன் கண்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு, கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்கள் மறைந்து கண்களுக்கு பிரகாசத்தை அளிக்கிறது.
உங்களுக்கு அஜீரண பிரச்னை, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக சிறிது கொத்தமல்லியை மென்று சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் விரைவில் குணமடையும். நமது ஈரலை பாதுகாக்கும் சக்தியும் கொத்தமல்லிக்கு உண்டு. இதற்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை இருப்பதால் அம்மை நோய்க்கு மருந்தாகவும் இது பயன்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதைக் குறைப்பதற்கு கொத்தமல்லி சாப்பிடலாம். கொத்தமல்லியில் இருக்கும் பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. அத்துடன் இரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் ஆற்றலும் கொத்தமல்லிக்கு உண்டு.
நீங்கள் தேநீர் விரும்பியாக இருந்தால் கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடியுங்கள். இது சிறுநீரை உடலில் தேங்கவிடாமல் உடலை விட்டு வெளியேற்றும். நமது உடலில் அதிகமாக சிறுநீர் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். தனியா தேனீர் குடிப்பதால் அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல், வாய் பிரச்னைகள் போன்றவை சரி செய்யப்படும்.
கொத்தமல்லிக்கு புண்களை ஆற்றும் ஆற்றல் அதிகம். நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்க வைக்கும். குறிப்பாக, மாதவிலக்கு பிரச்னை, வலி போன்றவை உடையவர்கள் தினசரி கொத்தமல்லி ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி, பல ஆரோக்கிய நன்மைகள் கொத்தமல்லிக்கு உள்ளது. நீங்களும் தினசரி இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.