யார் பெறுவார் அந்த அரியாசனம்?

யார் பெறுவார் அந்த அரியாசனம்?

மூத்த பத்திரிக்கையாளர் ஜாசன்.
நாட்டில் 2024-ல் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளூம் இப்போதே வியூகம் வகுக்கின்றன. காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சும் வரத் தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடன் சோனியாகாந்தி காணொளி மூலமாகவும் நேரிலும் பேசி பாரதிய ஜனதாவை எப்படி எதிர்கொள்வது, வியூகம் அமைப்பது என்று பேசுகிறார். குறிப்பாக, ''பாரதிய ஜனதாவை தோற்கடிக்க நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்பதை வலியுறுத்திச் சொல்கிறார் சோனியா கந்தி.

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. குறிப்பாக, உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்! இதை பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்று கூட சொல்லலாம். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா, காங்கிரஸ் என்று நான்கு பிரதான கட்சிகள் இப்போதைக்கு தனித்துப் போட்டியிடுவோம் என்று சொல்லி வருகிறது. இதில் காங்கிரஸ் ஏற்கெனவே தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டது. உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளரான பிரியங்காகாந்தி அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவர்தான்.பியின் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சும் வர தொடங்கிவிட்டது. அதிக அளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு தேசிய அளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இருக்கிறது. ஏற்கெனவே அப்படி நடந்திருக்கிறது. அதனால்தான் உ.பி தேர்தலை காங்கிரஸ் முக்கியமாகப் பார்க்கிறது.

ராகுல்காந்தி, கடந்த ஓராண்டாக கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை எல்லோரையும் சந்திக்கிறார். சுற்றுப்பயணம் பேட்டி அறிக்கை ட்விட்டரில் பாரதிய ஜனதா கட்சி கண்டனம் என்று திடீர் சுறுசுறுப்பாகி விட்டார். எல்லாம் 2024 தேர்தலுக்காக என்பது எல்லோருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகளுக்கு சில மாதங்களுக்கு முன் மதிய விருந்து தந்தார். டெல்லியில் போராடிய விவசாயிகளைப் பார்த்தார். இப்படி ராகுல்காந்தி அரசியல் செய்தாலும் மூத்த தலைவர்களின் நம்பிக்கை வளையத்தில் இன்று வரை ராகுல்காந்தி வரவில்லை. கட்சியின் தலைவர் யார் என்று அவர்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்போதுதான் சோனியாகாந்தி நான்தான் கட்சியின் தலைவர் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். 2024 எப்படியும் ஆட்சியை பிடிக்க சோனியா, ராகுல் கடும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதுதான் உண்மை.

இதைவிட முக்கியம் இரண்டு வாரங்களுக்கு முன்பு மேகாலயா மாநிலத்தில் இருந்த 17 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். ஏற்கெனவே திரிபுரா, கோவா மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தடம் பதித்திருக்கிறது. தற்போது அதன் பார்வை மேகாலயா, அசாம் என்று திரும்பியிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 12 பேரில் முன்னாள் காங்கிரஸ் முதல்வரும் அடக்கம். சமீபத்தில் டெல்லி வந்த மம்தா பானர்ஜி பிரதமரை சந்தித்தார். ஆனால், சோனியாகாந்தியை சந்திப்பதை தவிர்த்தார்.

இந்தச் சூழலில் மம்தா பானர்ஜிக்கு தேசிய அரசியலில் சமீபத்தில் நாட்டம் சற்று கூடவே இருக்கிறது. பாரதிய ஜனதாவை எதிர்த்து சவால் விடும் அளவுக்கு உரக்கக் குரல் தரும் முதல்வர் தற்போது அவர்தான். கூடவே மாநில கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை, காங்கிரஸ் வேண்டாம் என்பதுதான் அதற்கு அவர் சொல்லும் காரணம். காங்கிரஸ் செல்வாக்குடன் இருந்த மாநிலங்களில் தற்போது மாநிலக் கட்சிகள்தான் அதிக செல்வாக்குடன் இருக்கிறது. இன்னும்

சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சி அந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்கிறது. அதற்கு உதாரணம் தமிழ்நாடு என்று சுட்டிக்காட்டுகிறார்.

சமீபத்தில் மும்பைக்கு சென்ற மம்தா பானர்ஜி சிவசேனா கட்சித் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசும்போது அரசியலில் தொடர் முயற்சி அவசியம் நீங்கள் வெளிநாடு சுற்றிக் கொண்டிருந்தால் மக்கள் எப்படி நம்புவார்கள் என்று ராகுல் காந்தி பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார். அதேபோல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றி கேட்டதற்கு தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்தார். மம்தாவை சோனியாவுடன் ஒப்பிட்டு எல்லாம் பேச முடியாது. 2004ல் சோனியா காந்தியை முன்னிலைப்படுத்திதான் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. சோனியா வெளிநாட்டு பெண்மணி என்ற பிரச்சாரம் எடுபடாமல் போனதால், தற்போது காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் கட்சிகள் அதுபற்றி பேசுவது இல்லை.

அதேசமயம் கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் அரசியலில் இறங்கு முகம்தான் என்பதும் உண்மை. மம்தா பானர்ஜி தொடர்ந்து ஒரு விஷயத்தைச் சொல்லி வருகிறார். 'யார் பிரதமர் வேட்பாளர் என்று இப்போது பேச வேண்டாம். பாரதிய ஜனதாவை தோற்கடிப்பது பற்றி மட்டும் நாம் பேசுவோம்' என்கிறார். இதை காங்கிரஸ் ரசிக்கவில்லை. ஆனால், மறுத்துப் பேசவில்லை. மற்ற கட்சிகளின் நிலையும் இதுதான். மம்தா சூழ்நிலையை தனக்கு சாதகமாக, பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக்கொள்ள மறைமுகமாக முயற்சி செய்கிறார். அதனால்தான் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி வேண்டாம் என்கிறார். அதேசமயம் மோடிக்கு மாற்று மம்தா இல்லை அதை சொல்லும் துணிச்சல் எதிர்க்கட்சி களுக்கும் இல்லை இதுவும் உண்மைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com