வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் நிதி சார்ந்த கல்வி அறிவு ஒரு மிக முக்கியமான வாழ்க்கைத் திறனாகும். இது குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு சரியான தகவல்களை அறிந்து முடிவுகளை எடுக்கவும், பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவும் அதிகாரம் அளிக்கிறது. எனவே, இளம் வயதிலேயே நிதி சார்ந்த கல்வியறிவை வளர்த்துக்கொள்ளத் தொடங்குவது அவசியம். ஏனெனில் இது பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமைகிறது. இந்த பதிவில் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு எதுபோன்ற நிதிக்கல்வியை கற்பிக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
பணம் மற்றும் அதன் மதிப்பு: நிதிக் கல்விக்கான முதல் படி பணத்தின் கருத்தையும் அதன் மதிப்பையும் புரிந்து கொள்வதாகும். பணம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்கவும். மேலும் அதன் மதிப்பையும் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை விளக்கிச் சொல்லுங்கள். தேவைக்கு ஏற்ப செலவு செய்ய அவர்களைத் தூண்டுங்கள்.
சேமிப்பு மற்றும் பட்ஜெட்: பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுங்கள். இலக்குகளை நிர்ணயித்து கிடைக்கும் பணத்தை அவர்களுக்கு சேமிக்க கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு கிடைக்கும் பணம் மற்றும் செலவுகளுக்கு ஏற்றவாறான பட்ஜெட்டை உருவாக்க உதவுங்கள். அவர்களது சேமிப்பின் ஒரு பகுதியை அவர்களுக்கான கல்வி அல்லது புதிய முயற்சிகள் போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு ஒதுக்க அவர்களை ஊக்குவிக்கவும்.
ஆசைகள் மற்றும் தேவைக்கு இடையேயான வேறுபாடு: எதையாவது சொல்லி நம்மிடம் விற்பனை செய்துவிடும் இந்த உலகில் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையேயான வேறுபாட்டை குழந்தைகளுக்கு உணர்த்துவது மிகவும் முக்கியமானது. எந்த பொருளை வாங்க அவர்கள் ஆசைப்பட்டாலும் “இது எனக்கு உண்மையிலேயே தேவைதானா?” போன்ற கேள்விகளை அவர்களே கேட்டு வாங்குவதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றும் அவர்கள் வாங்கும் பொருட்கள் நீண்ட கால மதிப்பை அவர்களுக்கு அளிக்குமா? என்பதையும் அவர்களே புரிந்துகொண்டு விவேகமாக செலவு செய்வதை கற்றுக் கொடுக்கவும்.
சம்பாதித்தல் மற்றும் தொழில் செய்தல்: குழந்தைகள் சிறுவயதில் சம்பாத்தியம் பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். ஆனால் அதைப் பற்றிய புரிதல் சிறுவயதிலேயே ஏற்பட்டுவிட்டால், எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கையை எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற முடிவை அவர்களே சிறப்பாக எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். பணத்தை எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். வேலைக்கு செல்வது மற்றும் தொழில் செய்வதில் உள்ள வேறுபாட்டையும் கற்பிக்கவும். இது அவர்களுக்கு பெரிதளவில் உதவும்.
வங்கிகள்: வங்கிகள் பற்றிய முழு தகவலை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். வங்கிகள் பணத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைக்கின்றன மற்றும் சேமிப்பிற்கு எப்படி வட்டி வழக்குகின்றன என்பதை விளக்குங்கள். வங்கியில் இருந்து பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் திரும்பப் பெறுவது பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். வங்கிக் கணக்கை எப்படி நிர்வகிக்க வேண்டும் மற்றும் எவ்வாறு கணக்கை கையாள வேண்டும் போன்ற அனைத்தையும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
முதலீட்டுக்கான அறிமுகம்: குழந்தைகள் வளர வளர முதலீடு என்ற ஒன்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். காலப்போக்கில் அவர்களின் சேமிப்பை அதிகரிக்க முதலீடு எவ்வாறு உதவும் என்பதை விளக்குங்கள். பங்குகள், பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் பற்றிய விஷயங்களை எளிமையாக விளக்கவும். குழந்தைகளுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது போன்ற அவர்களின் வயது மற்றும் நிலைக்கு ஏற்ற முதலீட்டு விருப்பங்களை அவர்களே தெரிந்து கொள்ள ஊக்குவிக்கவும்.
இதுபோன்ற விஷயங்களை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்பிப்பது மூலமாக, அவர்களின் நிதி தேவையை அவர்களே சரியாகப் புரிந்துகொண்டு பணத்தை முறையாக நிர்வகிக்க உதவியாக இருக்கும். மேலும் இந்தத் திறனானது எதிர்காலத்தில் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்.