டி.வி. சீரியல்கள் பெரும்பாலானோரின் பொழுதுபோக்குக்கு உதவி வருகின்றன!
ப்ரேக்ஃபாஸ்ட் முடித்து விட்டு சீரியல்கள் பார்க்க அமர்ந்தால், லஞ்ச், டின்னர் என்று எல்லாவற்றையும் கடந்து, படுக்க செல்லும் வரை அவை கூடவே வருகின்றன! குறுகிய காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நுணுக்கங்களி்ல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன!
முதலில் ‘ஆன்டனா’ என்றார்கள்; அப்புறம் ‘கேபிள்’ என்றும் ‘செட்டாப் பாக்ஸ்’ என்றும் கூறினார்கள்; அதனைத் தொடர்ந்து ‘டிஷ்’ வந்தது; இப்பொழுதோ இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி ‘வை-பை’ முன்னணியில் நிற்கிறது!
20 இஞ்சில் ஆரம்பித்த திரைகள் மெல்ல வளர்ந்து 98 வரை வந்துவிட்டன! பெரிய வீடுகளின் வரவேற்பறைகளே மினி தியேட்டர்களாகி விட்டன! சிறியவையே சிறப்பானவை (Small is beautiful) என்பது இந்த விஷயத்தில் தோற்று, பெரியவையே வேண்டப்படுபவை (Big is Better) என்றாகி விட்டது!
பெரும்பாலான சீரியல்களில் பெண்களுக்கே முதலிடம்! ஆமாம் போடும் இடத்திலும், அவர்களுக்குத் தலையாட்டும் விதத்திலுமே ஆண் கதாபாத்திரங்கள்! அவ்வாறான, மதியத்தில் ஒளிபரப்பப்படும், ஒரு சீரியலே ‘இலக்கியா’ என்பது.
அண்ணன் தங்கைக்குப் பிறக்கும் இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் வளர்ந்தாலும், தங்கையின் பெண்ணான, தந்தையற்ற இலக்கியா நேர்மையுடன் வாழப் போராடுவதும், அண்ணன் மகள் அஞ்சலி அதர்ம வழிகளையே பின்பற்றுவதுந்தான் கதை! இரண்டு பேருமே ஒரே வீட்டிற்கு, அண்ணன்- தம்பிகளுக்கு மனைவிகளாகச் சென்றாலும், எல்லாவற்றிலுமே போட்டிதான்! குடும்பத்தாரின் அனுதாபத்தைப் பெறவும், சொத்தைச் சுருட்டவும், கர்ப்பம் தரிக்காத அஞ்சலி, தன்னைக் கர்ப்பிணியாகக் காட்டிக்கொள்ள செய்யும் தகிடு தத்தங்களும், அவற்றை உடைத்து உண்மையை வெளிக் கொணர இலக்கியா செய்யும் தந்திரங்களுந்தான் கதை! இலக்கியாவின் கணவன், வில்லன் எஸ்.எஸ்.கேவின் மகன் என்ற ரகசியம் காக்கப்பட்டு வருவது கதைக்கு வலு சேர்க்கிறது! தன் மகன்தான் கௌதம் என்பதையறியாமல், அவனைத் தொழில் ரீதியாக வீழ்த்த அஞ்சலியுடன் கை கோர்த்து ஆட்டம் போடுகிறார் எஸ்.எஸ்.கே! இந்த நிலையில் இலக்கியா சிறை செல்லவும் நேர்கிறது! ஒரு சில நிகழ்வுகளுக்குப் பின் இலக்கியா வெளியில் வந்து, போலி சர்டிபிகேட் கொடுத்த டாக்டரைப் பிடித்து விட, தற்போது உண்மை வெளி வந்துள்ளது!
உயிர் காக்கும் உன்னதப் பணியாற்றும் டாக்டர்கள் பணத்திற்காகப் போலிச் சான்றிதழ்கள், அதுவும் இல்லாத குழந்தையை இருப்பதாகக் கூறி வழங்குவது மனதிற்கு வருத்தமளித்தாலும், சமுதாயத்தின் உண்மை நிலை அதுதான் என்பதை நினைக்கையில் கோபமே வருகிறது! எல்லோரும் அப்படியில்லை என்பதில் ஒரு சிறு ஆறுதல்!
பணமே பல தவறுகளுக்கும் காரணமாக அமைவதை இந்த சீரியலும் எடுத்துக் காட்டுகிறது! பணமும் குதர்க்க எண்ணங்களும் கொண்டவர்கள் எளிதாகத் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதும், நேர்மையான குணம் கொண்டவர்கள் அவற்றை எதிர்த்துப் போராட பல அவலங்களைச் சந்திக்க வேண்டியுள்ளதையும் இலக்கியா சீரியல் நன்றாகவே காட்டுகிறது!
கெட்ட எண்ணங்கொண்டவர்களுக்குத் தொடர்ந்து நல்லதே நடப்பதும், நல்லவர்கள் இறுதி வரை சிரமப்படுவதும் ரொம்பவும் பழைய முறை! தீய சிந்தனை கொண்டவர்களை அடிக்கடி தண்டிப்பதையே மக்களும் விரும்புவார்கள்; அதுவே நியாயமும் என்பதோடு அது சமுதாயத்திற்குப் படிப்பினையாகவும் அமையும்! அந்தப் படிப்பினையைப் பரப்ப, சின்னத்திரை சீரியல்கள் முன்வர வேண்டும்!
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!’ என்பார்கள்! ரசிகர்கள் சீரியல்கள் முடியப் போவதாக எண்ணுகையில், அவற்றை மேலும் நீட்டுவது அதிருப்தியையே அளிக்கும் என்பதை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர வேண்டும்! ‘எதுவும் தக்க தருணத்தில் நிறைவு பெற்றால்தான் மக்களின் மனங்களில் மகத்தான இடத்தைப் பெறும்!’ என்பது எல்லாக் காலங்களிலும், எல்லாவற்றுக்கும் பொருந்தும்!