ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Health benefits of banana flower
Health benefits of banana flower
Published on

லகில் கண்ணைக் கவரும் வண்ணப்பூக்கள் எத்தனையோ இருக்கிறது. அதில் உண்ண உகந்த சில பூக்களில் ஒன்று வாழைப்பூ. உடலுக்கு குளிர்ச்சியையும், மலர்ச்சியையும் தரும் பூ. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் வாழையை ஒரு பெண் தெய்வமாக வணங்கி வந்திருக்கின்றனர். அதில் கிடைக்கும் வாழைப்பூவுக்கு ஏராளமான நோய்களை விரட்டும் ஆற்றல் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.

வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள், கருப்பைக் கட்டிகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிக்கு வாழைப்பூ மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இத்தகைய குறைபாடுகளை குணப்படுத்துவதற்கு வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது. வாழைப்பூவை பொரியல், வடை, அடை, தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கலாம்.

வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் வாழைப்பூ தடுக்கும். மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் வாழைப்பூவை நறுக்கி சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து அதனுடன் மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபின் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் அஜீரணம் நீங்கும். வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வாழைப்பூ பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப் பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கணையம் வலுவடைந்து உடலுக்குத் தேவையான இன்சுலினை சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

மலம் கழிக்கும்போது மலத்தில் இரத்தம் சேர்ந்து வெளியேறுவதை இரத்த மூலம் என்கிறார்கள். இந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை வாழைப் பூவை உணவில் சேர்த்துக்கொள்ள விரைவில் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
புத்தகத்தை கையில் எடுத்தாலே தூக்கம் வருகிறதா? உங்களுக்கு சில யோசனைகள்!
Health benefits of banana flower

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப் பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக கடைய வேண்டும். பின் அதனுடன் நெய் சேர்த்து வாரம் 2 முறை சாப்பிட, உடல் சூடு குறையும், அஜீரணக் கோளாறு காரணமாக சிலருக்கு வயிற்றுக் கடுப்பு ஏற்படும். இக்குறைபாடு உள்ளவர்கள் வாழைப் பூவுடன் நீர் சேர்த்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி இளஞ்சூடான அந்த நீரை பருகி வர வயிற்றுக் கடுப்பு சரியாகும்.

பெண்களில் சிலருக்கு மாதவிலக்கின்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் வாழைப் பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பகுதியில் பாதியை எடுத்து நசுக்கி சாறு பிழிந்து அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூவை ரசம் வைத்து சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும். வறட்டு இருமல் உள்ளவர்களும் இந்த ரசத்தை குடிக்கலாம். மலட்டுத்தன்மை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் வாழைப் பூவை சேர்த்துக்கொள்ள மலட்டுத்தன்மை நீங்கும்.

வாழைப்பூவின் சாறு புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வாழைப்பூக்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுவதோடு குடல் புண்களைக் குறைக்கும். இதனால், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். இது ஆண்டி மைக்ரோபியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பதுடன், ஆண்டி பயாடிக்காகவும் செயல்படும். இது எடை மேலாண்மைக்கு உதவியாக இருக்கும். பாரம்பரிய மருத்துவத்தில், இது மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com