நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. 1970களில் தொடங்கி 90களின் முற்பகுதி வரை தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் ராம்குமார், ராஜ்பாபு என்பவருடன் சேர்ந்து சொந்தமாக சென்னை அண்ணாசாலையில், அவரின் பெயரிலேயே தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிப்புரியும் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இஎஸ்ஐ தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை.
இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.