உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

சில்கூர் பாலாஜி  கோவில்
சில்கூர் பாலாஜி கோவில்

கோயிலில் கண்களைத் திறந்துகொண்டு கடவுளைக் கும்பிட வேண்டும். ஏழை – பணக்காரன் என்கிற வேறுபாடு இன்றி வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டும். சன்னிதிப்படிகளில், பக்தர்கள் வைக்கும் பணத்தை திரும்ப எடுத்துச்செல்லுமாறு பணிவோடு கூறும் அர்ச்சகர்கள். பணம் – காசு போட உண்டியலே கிடையாது. எங்கே...?

மூஸி நதிக்கரையில், ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சில்கூர் பாலாஜி கோயில்தான். மேலே கூறியவை எல்லாம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்தாபிதமான கோயில்

ஸ்தலம் உருவாகிய கதை

இல்லற வாழ்வில் இருந்தபோதிலும், துறவியைப் போல வாழ்ந்த மாதவரெட்டி என்கிற பெரியவர் அநேக நல்ல காரியங்களைச் செய்தவண்ணம் சில்கூரில் வசித்துவந்தார். சரியான பாதைகள் கிடையாத அந்தக் காலத்தில், கால்நடையாகவே திருப்பதிக்குச் சென்று வெங்கடாசலபதியை வணங்கி வந்தவர்.

தள்ளாமை காரணம், ஒருதடவை திருப்பதி செல்ல இயலாததிற்காக மிகவும் வருந்தினார். அச்சமயம் அவரது கனவில், “நான் இங்கேயே இருக்கிறேன். நீ தரிசனம் பண்ணலாம்” என அசரீரியாகக் கூறி, பாலாஜி தரிசனம் கொடுத்தார். உடனே அவர் ஆட்களைக் கூப்பிட்டு அந்த இடத்தைத் தோண்டுகையில் கிடைத்த பெருமாள் சிலையின் கண்ணிற்கு மேலும் மார்பிலும் லேசாக அடிபட்டு நசுக்கம் ஏற்பட்டதைக் கண்டு துடித்தார்.

‘பசுவின் பாலால் அபிஷேகம் செய்தால் சரியாகிவிடும்’ என ஒருவன் மூலமாக அருள்வாக்கு கிடைக்க, அப்படியே செய்ய நசுக்கலும் மறைந்தது. புனித ஸ்தலமும் உருவானது.

சிறப்பம்சம்:

வேறு எந்த பாலாஜி கோயிலிலுமில்லாத சிறப்பான விசேஷங்கள் இங்கே உண்டு.

* பத்மாவதி தாயாரின் மூன்று கரங்களிலும் பத்மம் (தாமரை இருப்பது;

* ஸ்ரீதேவியும், பூதேவியும் ஒரே சிலையில் சேர்ந்து இருப்பது;

* 108 பிரதட்சிணங்களைப் பக்தர்கள் செய்வது.

கோயில் மண்டபத்தை ஸ்ரீனிவாச ராகவாச்சாரி கட்ட ஏற்பாடு செய்ய, பிரபல நடிகைகளான வைஜயந்திமாலா, பானுமதி ஆகியோர் கோயில் வளர்ச்சிக்கு உதவினர்.

108 பிரதட்சிணத் தகவல்

ஒருமுறை தண்ணீர் கஷ்டம் அங்கே அதிகம் ஏற்பட்டது. சுமார் 70 அடிகள்வரை தோண்டியும், ‘போர்வெல்’ தண்ணீர் வரவில்லை. பெரியவர் பாலாஜியை வேண்டி 11 தடவைகள் கோயிலைப் பிரதட்சிணம் செய்ய ஆரம்பித்தார். அவ்வாறு செய்கையில், தண்ணீர் மட்டும் வந்துவிட்டால் 108 பிரதட்சிணங்கள் செய்வதாக மனதில் உறுதி செய்துகொண்டார். 11 பிரதட்சிணங்கள் முடியும் சமயம், திடீரென தண்ணீர்வர, 108 பிரதட்சிணங்களும் செய்தார். இந்த 11 மற்றும் 108 பிரதட்சிண வேண்டுதல் 1977 ஆம் வருடத்திலிருந்து ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!
சில்கூர் பாலாஜி  கோவில்

விசா கடவுள்

அன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா செல்ல விசா கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இப்போதும் சில சமயங்களில் கிடைப்பதில்லை. சில்கூர் பாலாஜியை மனதார வேண்டி 11 பிரதட்சணம் வைத்து சென்றால், கைமேல் பலன் கண்டிப்பாக உண்டு. பின்னர் வந்து 108 பிரதட்சணங்கள் செய்வார்கள். இதன் காரணம் ‘விசா காட்’ என்கிற பெயர் பாலாஜிக்கு வந்துவிட்டது. விசாவிற்காக மட்டுமல்ல, பல வேண்டுதல்களைப் பக்தர்கள் பாலாஜியிடம் வைக்க, பலன் கிடைக்கிறது என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

பிரதட்சணத்தை எண்ண உதவியாக, 108 எண்கள் கொண்ட அச்சடித்த காகிதம் கோயிலில் இலவசமாகக் கிடைக்கிறது. தினசரி சுமார் 30,000க்கு மேலும், விசேட தினங்களில் ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் பாலாஜியைத் தரிசிக்க வருகின்றனர்.

ஸ்ரீராம நவமியின்போது, 7 நாட்கள் ‘பிரம்மோத்சவ’ விழா இங்கே விமரிசையாக நடைபெறுகிறது. “எல்லாமே பாலாஜி பார்த்துப்பார்; நாங்கள் ஒன்றுமே இல்லை” என கோயிலைப் பராமரித்துவரும் அன்பர்கள் எப்போதும் கூறுவது வழக்கம்.

அந்தக் காலம் முதலேயே கோயிலில் பணம் போடும் வழக்கம் கிடையாது. ஏதாவது கொடுக்க விரும்பும் பக்தர்கள், அந்தந்த வேலை செய்யும் நபர்களிடம் கொடுத்துவிட்டால், அவை பாலாஜியை சேர்ந்துவிடுமென நம்புகிறார்கள். ‘வாக்’ எனப்படும் மாத இதழ் 5 ரூபாய்க்கு விற்கப்படுவதை பக்தர்கள் வாங்கி, பிறருக்கு இலவசமாகக் கொடுக்கின்றனர்.

உண்டியலே இல்லாமல் வேண்டியதை அளிக்கும் ‘சில்கூர்’ பாலாஜி ஒருபுறம், பெரிய பெரிய உண்டியல்களுடன் அருள்பாலிக்கும் திருப்பதி பாலாஜி மறுபுறமுமாக ஆந்திர மாநிலத்தில் அம்சமாக வீற்றிருக்கின்றனர்.

‘என்னே கடவுளின் திருவிளையால்?’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com