சமந்தா முதன்முதலில் சினிமாவில் அறிமுகமானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில்தான். படம் வெளியாகி 14 வருடங்கள் ஆன நிலையில் தற்போது சமந்தா திரைத்துறையில் கால் பதித்து 14 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.
சமந்தா கல்லூரி இறுதி ஆண்டு படித்து முடிப்பதற்குள்ளேயே மாடல் ஆவதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அந்தவகையில் ஒரு மாடல் போட்டியில் சமந்தா கலந்துகொண்ட போதுதான் சமந்தாவை இயக்குனர் ரவி வர்மன் பார்த்து திரைத் துறையில் அவரைக் கொண்டுவர எண்ணினார். அதன்பின்னர்தான் 2010ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் அவரின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவிற்கு வாய்ப்புக் கொடுத்தார்.
இந்த படத்தில் சமந்தா நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நடிகையாகவே நடித்திருப்பார். இப்படத்தின் கதாநாயகன் கார்த்திக் (சிம்பு) எடுக்கும் படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்திருப்பார். கதாநாயகனாக நாக சைதன்யா நடித்திருப்பார். சமந்தாவின் சினிமா துறையில் முதல் ஜோடியாக நடித்தது நாக சைதன்யாதான். அதேபோல் நிஜ ஜோடியாக ஆனதும் நாக சைதன்யாதான்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்தியை நந்தினி காதலிப்பது போல கதைக்களம் அமைந்திருக்கும். ஆனால் கார்த்திக் ஜெஸ்ஸியை மட்டுமே நினைத்து வாழ்வது போல கௌதம் கதையை அமைத்திருப்பார். என்னதான் கார்த்திக் வேறு பெண்ணைப் பார்க்கவில்லை என்றாலும் தனது கதையில் ஜெஸ்ஸியாக நடிக்கும் ஒரே ஆள் நந்தினி மட்டும்தான் என்று நந்தினியை இரண்டாவது ஜெஸ்ஸியாக பாவித்திருப்பார். முதலில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜெஸ்ஸியாக நடிக்க நடிகை ஜனனி ஐயரே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவன் இவன், தெகிடி, போன்ற படங்களில் நடித்தவர் இவர். பிற்பாடு இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இயக்குனராக நடித்த கே.எஸ்.ரவிக்குமாரின் துணை இயக்குனராக நடித்தார்.
சமந்தா கேமியோ ரோலில் நடித்த முதற்படமான விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படம் 'யே மாயா சேசவே' என்று பெயரிடப்பட்டது. இப்படத்தில் கார்த்திக், ஜெஸ்ஸியாக நாக சைதன்யா மற்றும் சமந்தாவே நடித்திருப்பார்கள். சமந்தாவின் முதல் படமே தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இந்த 14 வருடங்களிலேயே சமந்தா சுமார் 50 படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நாக சைதன்யாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது படமாக அமைந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் இவருக்கும் சினிமா துறையில் வெற்றிகரமாக வலம் வர ஒரு வாய்ப்பாக அமைந்தது.