முந்திரிப் பருப்பு உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்குமா?

Cashew nuts
Cashew nuts
Published on

‘முந்திரிப் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்’ என்கிற கருத்து பலருக்கும் உண்டு. முந்திரியில் உள்ள சத்துக்கள் யாவை? தினமும் எவ்வளவு சாப்பிடலாம்? யார் இதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முந்திரி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொட்டைகள். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளன. ஒரு அவுன்ஸ் அதாவது தோராயமாக 28 கிராம் முந்திரியில் 157 கலோரிகள், 12 கிராம் கொழுப்பு, 5 கிராம் புரதம், கார்போஹைட்ரேடுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. முந்திரியில் கலோரிகள் அதிகம் உள்ளன. இவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது கலோரிகள் கூடி உடல் எடையும் அதிகரிக்கும். எனவே, முந்திரிப் பருப்பை தினமும் நான்கு அல்லது ஐந்து பருப்புகள் மட்டுமே உட்கொள்ளலாம்.

ஆரோக்கியமான கொழுப்புகள்: முந்திரியில் உள்ள கொழுப்புச் சத்து மிகவும் ஆரோக்கியமானது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இவை இதயத்திற்கு ஆரோக்கியம் அளிப்பவை. எனவே, இவற்றை இதய நோயாளிகள் கூட குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்கள்: முந்திரியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்கின்றன. இவற்றை பிற கொட்டைகளுடன் சேர்த்து உண்ணும்போது நன்மை பயக்கும். இதில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

உடல் எடை கூடுமா?

முந்திரியை உண்பதால் உடல் எடை கூடும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது அவரவரின் ஒட்டுமொத்த உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நன்றாக வயிறு முட்ட உண்டுவிட்டு முந்திரியையும் ஒரு கை பார்த்தால் அது உடல் எடைக்கு வழி வகுக்கும். அதேசமயத்தில் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக ஏராளமான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றுடன் சிறிதளவு முந்திரிப் பருப்பையும் எடுத்துக் கொள்ளும்போது அது ஆரோக்கியமான உணவாக மாறுகிறது. இந்த முறையில் உண்ணும்போது எடை அதிகரிக்காது.

யாரெல்லாம் முந்திரிப் பருப்பை தவிர்க்க வேண்டும்?

நட்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள்: சிலருக்கு முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் முந்திரியைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இவர்களுக்கு லேசானது முதல் கடுமையான பாதிப்பு வரை ஏற்படலாம்.

குறைந்த உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள்: கடுமையான குறைந்த கொழுப்பு அல்லது கீட்டோஜெனிக் உணவை பின்பற்றும் நபர்கள் முந்திரிப் பருப்பை தவிர்க்கலாம். ஏனென்றால், இதில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
காற்றை சுத்தம் செய்யும் ஃபெர்ன் தாவரங்கள்: சில சுவாரஸ்ய உண்மைகள்!
Cashew nuts

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள்: முந்திரி போன்ற அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு அதிக அளவில் உடல் எடை கூடும்.

சிறுநீரக பாதிப்புகள்: முந்திரியில் ஆக்சலேட்டுகள் அதிகமாக உள்ளன. இவை சிறுநீரக பாதிப்புகள் உள்ள நபர்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் முந்திரியை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தவிர்த்து விடலாம்.

இரைப்பை குடல் பிரச்னை உள்ளவர்கள்: இரைப்பை, செரிமான சிக்கல்களைக் கொண்ட நபர்கள் முந்திரிப் பருப்பைத் தவிர்த்து விடலாம். ஏனென்றால், இவர்களுக்கு வீக்கம் அல்லது வாயு போன்ற அறிகுறிகளை உடலில் ஏற்படுத்தி விடும்.

நீரிழிவு நோயாளிகள்: இவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் மிகக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும்.

சில மருந்துகளை உட்கொள்பவர்கள்: முந்திரியில் பொட்டாசியம் ஓரளவு அதிகமாக இருக்கிறது. பொட்டாசியம் அளவுகளுடன் தொடர்புடைய சில வகை மருந்துகளை எடுத்துக் கொண்டால் இவர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com