வெள்ளித்திரை

என்னாது? RRR பாலிவுட் திரைப்படமா? ரசிகர்கள் கொந்தளிப்பு

கிரி கணபதி

லக சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்காரை, நேரடியாக வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை RRR தட்டி தூக்கியுள்ளது. 

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில்,  RRR திரைப்படத்தில் உருவாக்கப்பட்ட 'நாட்டு நாட்டு' என்ற பாடல் சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறது. இதற்கு இசையமைத்த இசையமைப்பாளர்களான கீரவாணியும், சந்திரபோஸும் இவ்விருதை இணைந்து பெற்றுக் கொள்கிறார்கள். 

இந்தியாவில் திரையிசையில் இதுவரை இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் மட்டுமே ஆஸ்கர் விருது வென்றிருந்தார் என்ற நிலையில், தற்போது அவருக்குப் பிறகு இந்திய திரையிசைத் துறையில் ஆஸ்கரை வென்ற இசையமைப் பாளர்கள் என்ற பெருமையும், இவர்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்காக ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகம் அனைத்தும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி கொண்டிருக்கிறது. பிரபலங்களும், மக்களும் RRR திரைப்படக் குழுவினருக்கு தங்கள் வாழ்த்தைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். 

வாழ்த்து மழையில் சமூக வலைதளங்கள் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த 95வது ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் ஜிம்மி கிமமெல் என்பவர், RRR படத்தை பாலிவுட் திரைப்படம் என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

ஒரு காலத்தில் இந்தியத் திரைப்படம் என்றாலே இந்தி திரைப்படங்கள் தான் எனக் கருதப்பட்ட நிலையில், தற்போது பல தென்னிந்திய திரைப்படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதால், ரசிகர்களின் இந்த கொந்தளிப்பு நியாயமாகக் கருதப்படுகிறது. 

"இதுவரை RRR திரைப்படக் குழுவினர் இத்திரைப்படத்தை இந்தியாத் திரைப்படம் மற்றும் தெலுங்கு திரைப்படமாக மட்டுமே கூறிவந்த நிலையில், ஆஸ்கர் மேடையில் அதை பாலிவுட் படம்" என சொல்லியது ஆஸ்கர் குழுவினர் சர்ச்சைகளை விரும்புவதையே காட்டுகிறது என ரசிகர் ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 

மேலும், ஏராளமானவர்கள் இது பாலிவுட் படமல்ல. தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்திய திரைப்படம் என தங்கள் காட்டத்தைக் காட்டி வருகிறார்கள். அதேசமயம் இந்த 95வது ஆஸ்கர் விருது விழாவில் மற்றொரு தொகுப்பாளராக இருக்கும் இந்திய நடிகை தீபிகா படுகோனே, நாட்டு நாட்டு பாடலுக்கான நேரடி நடனத்திற்கு அழைப்பு விடுத்தபோது, இந்திய தயாரிப்பில் உருவான தெலுங்கு திரைப்படம் என்று கூறியிருந்தார். 

எஸ்.எஸ். ராஜமௌலி அவர்கள், RRR திரைப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட, ஒர் அக்மார்க் டோலிவுட் திரைப்படம் என தெரிவித்ததோடு, இதை ஓர் இந்தியத் திரைப்படமாக கூறுமாறு பல இடங்களில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

ஹெல்மின்த்ஸ் பாராசைட் தெரியுமா உங்களுக்கு?

ஜப்பானில் நடத்தப்பட்ட 6G சோதனை… டேய் யாருடா நீங்கெல்லாம்? 

மதிப்பெண் குறைவா..! கவலை வேண்டாம்..!

காலத்தால் முந்தைய மூத்த கணபதி அருளும் திருத்தலம் எது தெரியுமா?

நூலோர் தொகுத்தவற்றில் தலையாயது எது தெரியுமா?

SCROLL FOR NEXT