

ஒரு வாசகராகத் துவங்கி, தீவிர வாசகராகி, அதன் பத்திரிகையாளர், எழுத்தாளராகப் பரிணாமம் பெற்றவர் அண்மையில் மறைந்த லட்சுமணன் என்கிற வாதூலன்.
எண்பதுகளில் கல்கி வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான இரட்டையர்கள் சாருகேசியும், தமயந்தியும். சாருகேசியின் இயற்பெயர் விஸ்வநாதன். லட்சுமணன் அப்போது பேட்டி, கட்டுரைகளை தமயந்தி என்ற பெயரிலும், கதைகளை வாதூலன் என்ற பெயரிலும் எழுதுவார். பிற்காலத்தில் கட்டுரைகள், கதைகள் எல்லாவற்றுக்கும் வாதூலன் என்ற புனைப்பெயர்தான்.
சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம் இறச்சக் குளம் என்ற சிறு கிராமம். அப்பா பின்னி கம்பெனியிலும், சித்தப்பா கால்நடைக் கல்லூரியிலும் பணியாற்றியதால், இளம்வயது முதலே சென்னை புரசவாக்கம் வாசியாகி விட்டவர் லட்சுமணன்.
சிறு வயதிலேயே மிகுந்த வாசிப்பு ஆர்வம். “கடையில் அணில், கல்கண்டு பத்திரிகைகளை வாங்கி, அங்கேயே ஒரு புரட்டு புரட்டி பாதி படித்து முடித்துவிட்டுத்தான் வீட்டுக்கே புறப்படுவேன். புரசவாக்கத்தில் இருந்த ஒரு பூங்காவில் ஓர் நூலகம் உண்டு. அங்கே போய் எல்லா பத்திரிகைகளையும் வாராவாரம் படித்துவிடுவேன்” என்று அவர் பழைய நினைவுகளை அசைபோட்டதுண்டு.
ஒரு முறை சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு குமுதம் பிரதி அவரது வீட்டு முகவரிக்கு வந்தது. ஆச்சர்யப்பட்டுப் பிரித்துப் பார்த்தார். அவரது கடிதம் ஒன்று வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகி, அதற்கு இலவசப் பிரதி அனுப்பி இருக்கிறார்கள் என்று அறிந்தபோது ஆச்சரியமும், மகிழ்ச்சியும் இரட்டிப்பானது.
1958ல் கல்லூரியில் இறுதியாண்டு பரிட்சைக்கு சில நாட்கள் முன்பாக எதேச்சையாக சொந்த ஊருக்குச் சென்ற அப்பா அங்கேயே மறைந்துவிட்டார். பெரும் அதிர்ச்சிக்குள்ளான லட்சுமணனை, சித்தப்பா, ஆறுதல் சொல்லி, “பரிட்சை ரொம்ப முக்கியம். அதை நல்ல படியாக எழுதுவதில் கவனம் செலுத்து” என்று ஆலோசனை சொல்ல, அப்படியே செய்தார் லட்சுமணன். “அந்த சமயம் நான் பரிட்சை எழுதாமல் துக்கப்பட்டுக் கொண்டு ஊருக்குப் போயிருந்தால் என் வாழ்க்கையே வேறு மாதிரி ஆகி இருக்கும்! தக்க சமயத்தில் ஆறுதலும், ஊக்கமும் அளித்தவர் என் சித்தப்பாதான்” என்று சொல்லும்போது ரொம்ப எமோஷனலாகிவிடுவார்.
கனரா வங்கியில் உத்தியோகம் என்பதால் பணி நிமித்தம் பல ஊர்களில் பணியாற்றிய அனுபவஸ்தர். தனது வங்கிப் பணி அனுபவங்களைப் பல கதைகளாக, கட்டுரைகளாக எழுதி இருக்கிறார் அவர்.
கல்கியில் சாருகேசியும், இவரும் சேர்ந்து “வாசகர் சிறப்பிதழ்” தயாரித்தார்கள். அதில் அன்றைய தேதியில் தமிழின் நட்சத்திர எழுத்தாளராகத் திகழ்ந்த லட்சுமி தொடங்கி வாசகர்களின் கவனம் ஈர்க்கும் எழுத்தாளராகப் புகழேணியில் ஏறத் துவங்கி இருந்த பாலகுமாரன் வரை சிலருடன் அவரது பரம விசிறிகளான வாசகர்களை கலந்துரையாடச் செய்து தொகுத்து எழுதி இருந்தது எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது. இப்படி பல சுவாரசியமான கட்டுரைகள்.
கனரா வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வாசிப்பும், எழுத்தும்தான் அவருக்கு முக்கியமாகிப் போனது. ஒரு நல்ல எழுத்தைப் படித்து முடித்தவுடன், எழுதியவரை எப்படியாவது போனில் பிடித்து, வாயாறப் புகழ்வது அவருக்கே உரிய சிறப்பு. இன்றைய ஃபேஸ்புக், வாட்ஸாப் சுய தம்பட்ட உலகில் இது ஓர் அரிய குணம்.
தினமணியின் நடுப்பக்கத்தில் அவர் வங்கிகள், இலக்கியம், இசை, வாசிப்பு என பல்வேறு விஷயங்களையும் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதி வந்தார். அப்படி அவர் எழுதி அனுப்பிய ஒரு கட்டுரை, அவர் மறைந்த சில நாட்களுக்குப் பின் “எழுத்தாளர் வாதூலன் நம்மை விட்டுப் பிரிவதற்கு முன்பு அவர் எழுதிய கடைசி கட்டுரை இது” என்ற ஆசிரியரின் குறிப்புடன் பிரசுரமாகி இருந்தது.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, கல்கி அறக்கட்டளையும், தேவன் அறக்கட்டளையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக நகைச்சுவை எழுத்துப் பயிலரங்கு ஒன்றை நடத்தின. அதில் சுஜாதா, கிரேஸி மோகன், உள்ளிட்ட சிலர் நகைச்சுவை எழுத்தின் சூட்டுமங்களை சொல்லிக் கொடுத்தார்கள். அன்றைய அவர்களது உரைகளைத் தொகுத்து, “கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள்” என்று புத்தகமாக ஆவணப்படுத்தியவர் வாதூலன். அந்தப் புத்தகத்தில், கல்கியின் பல்வேறு படைப்புக்களிலும் இருந்து பல நகைச்சுவை முத்திரைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துக் கொடுத்திருந்தது படித்துப் படித்து, வயிறு வலிக்க சிரிக்கத் தக்கது.