S CHANDRA MOULI
எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli)
எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர்.
வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர்.
இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன.
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர்.
பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர்.
தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.