எளிதில் கிடைக்கும் இந்த ஆவாரம் பூ உடலுக்கு நல்ல மினுமினுப்பை தரும். நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள், கருப்பு திட்டுகளை போக்கும்.
ஆவாரம் பூவை சுத்தம் செய்து உலர்த்தி, காயவிட்டு அத்துடன் பாசிப்பயறு அல்லது கடலைப்பருப்பை சேர்த்து மிஷினில் அரைத்து வந்து டப்பாவில் பத்திரப்படுத்தவும். இதனை தினம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சிறிது நீர் விட்டு குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவ ஆவாரம் பூவால் தங்கம் போல் முகம் மின்னும்.
முகம், கழுத்து, கைகளில் ஏற்படும் தேமல் குணமாக ஆவாரம் பூ பொடியை சிறிது பால் விட்டு குழைத்து முகம் கை கழுத்துப் பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழிவி விட ஒரே வாரத்தில் குணமாகும்.
ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் ஏராளம். சரும ஆரோக்கியத்திற்கும்,முக பளபளப்பிற்கும் ஆவாரம் பூ உதவும்.
உடல் சூடு, தோல் வறட்சி, உடல் துர்நாற்றம் , உடல் அரிப்பு ஆகியவற்றிற்கு ஆவாரம் பூ கஷாயம் மிகவும் நல்லது. வாரம் இரு முறை ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி 1/2 கப் அளவிற்கு குடிக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும்.
தலைக்கு டை அடிப்பதால் நெற்றியில் ஏற்படும் கருமை திட்டுகள் நீங்க ஆவாரம் பூவுடன் சிறிது கசகசா, வெள்ளரி விதைகள் சில சேர்த்து அரைத்து தடவவும். சிறிது நேரம் கழித்து கழுவி விட கருமை திட்டுகள் காணாமல் போகும்
பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்க உலர்ந்த ஆவாரம் பூவுடன் கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அந்த பொடியில் சிறிதளவு நீர் விட்டு குழைத்து தேவையற்ற முடிகள் வளரும் இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.
ஆவாரம் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சூடு வர வதக்கி ஒரு காட்டன் துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுக்க சூட்டினால் உண்டாகும் கண் நோய்கள் குணமாகும்.
இரண்டு கைப்பிடி அளவு ஆவாரம் பூ எடுத்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியதும் பத்திரப்படுத்தவும். இதனை தினமும் தலைக்கு தேய்த்து வர முடி நன்கு செழித்து வளரும்.
தலைக்கு குளிக்கும் நாட்களில் ஆவாரம் பூவை சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை வடிகட்டி குளிக்கும் போது கடைசியில் இந்த நீரை விட்டு முடியை அலச முடி பளபளப்பாவதுடன் கருகருவென நீண்டு வளரும்.
முடி உதிர்வதை தடுக்க ஆவாரம் பூவுடன் செம்பருத்தி பூ 5, ஊறவைத்த வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வது குறையும்.
ஆவாரம் பூவை சமைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூவுடன் சிறு பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட உடல் அழகு பெறும். ஆவாரம் பூவில் சாம்பார், சட்னி, சூப்பென செய்தும் ருசிக்கலாம்.