ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாக உடைந்து புதிய கடல் பகுதி உருவாகும் காலம் விரைவாக நிகழும் என்று புவி அறிவியல் அறிஞர் சித்தியா எபிங்கர் தெரிவித்துள்ளார்.
பூமியின் சூழல் தற்பொழுது விரைவான மாற்றத்தைக் காணத் தொடங்கி இருக்கிறது. இது பல்வேறு வகையான புதிய நிலப்பரப்புகளை பூமியில் ஏற்படுத்தக் காரணமாக அமையும். மேலும், அரேபிய மற்றும் ஆப்பிரிக்க நிலப்பகுதிகள் இடையே புதிய கடல் விரைவாக உருவாகும் சூழல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் துபேன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய வருபவர் புவி அறிவியல் அறிஞர் சித்தியா எபிங்கர் இது குறித்துத் தெரிவிக்கையில், “அரேபியா மற்றும் ஆப்பிரிக்க, சோமாலிய பகுதிகளை உள்ளடக்கியது அஃபார் பகுதியாகும். இந்தப் பகுதியில் பூமிக்கு அடியிலான வெப்பம் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் பூமியினுடைய மேல் தட்டு நகர்வு விரைவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள சிவப்பு கடலில் இருந்து, ஏடன் வளைகுடா வரை உள்ள உப்புக்கடல் நிலத்தை இரண்டாக உடைத்து புதிய கடலாக உருவெடுக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதன் மூலம் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாக உடையக் கூடும். இதற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகள் ஆகும் என்று முன்பே கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது 10 லட்சம் ஆண்டுகளுக்கு குறைவான காலத்திலேயே இது நிகழும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அஃபார் நிலப்பகுதி ஆண்டிற்கு 2.5 சென்டி மீட்டர் வரை நகர்ந்து வருகிறது. பெரிய அளவிலான நில நடுக்கங்கள் பதிவாகும் பொழுது இது மேலும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆப்பிரிக்க நிலப்பகுதி இரண்டாக உடைந்து புதிய கடல் உருவாகும். அப்போது அந்தப் பகுதியில் புதிய மலைகள், மலை திட்டுக்கள், தீவுகள் ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.