சிட்டுக்குருவி 
பசுமை / சுற்றுச்சூழல்

பூமியிலிருந்து விடைபெற்றுக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவி இனம்!

பொ.பாலாஜிகணேஷ்

ம் வீடுகளில் முன்பெல்லாம் சிட்டுக்குருவிகள் கொஞ்சி விளையாடிய காலங்கள் வசந்தமாய் நம் மனதில் இருக்கும். சிட்டுக்குருவிகளை பார்க்கும்போது மனசு லேசாகும். நம் வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டும்பொழுது அதை அக்கறையோடு கவனித்துக் கொள்வோம்.

இன்றைய தலைமுறைகள் சிட்டுக்குருவி என்றால் கூகுளில் தேடி புகைப்படத்தை மட்டுமே பார்க்கக்கூடிய வாய்ப்புதான் உள்ளது. ஏனென்றால், சிட்டுக்குருவி எனும் பறவை இனம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. கிராமப் பகுதிகளில் கூட சுற்றுச்சூழல் பாதிப்பால் சிட்டுக்குருவிகள் இனம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

சிட்டுக்குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இக்குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 சென்டிமீட்டர் நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை.

ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கருப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும். சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது.

மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன. இக்குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும்.

சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன் தனியாக பிரிந்து விடுகின்றன.

சுற்றுச்சூழல் மாற்றங்களால் உலகம் முழுவதும் மரங்களும், பறவைகளும் அழிந்தும், குறைந்தும் வருகின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதால் சிட்டுக்குருவிகளின் இனம் அழிவை நோக்கி செல்கிறது.

சிட்டுக்குருவிகளின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை மார்ச் மாதம் 20ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக 2010ம் ஆண்டு அறிவித்தது. இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளன. டெல்லி அரசு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அறிவித்துள்ளது.

சிட்டுக்குருவிகளால் நம் மனது மட்டுமல்ல, இயற்கையும் சிறகடித்தது. ஆனால், செல் போன் போன்ற விஞ்ஞான வளர்ச்சியால் சிட்டுக்குருவிகளோடு சேர்த்து நம் மனதும் இயற்கையும் மகிழ்ச்சியை இழந்து இருக்கிறது என்பதுதான் நிஜமான உண்மை.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT