உலகில் உள்ள பெரும்பாலான உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீரையே நம்பியுள்ளன என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் இந்த இயற்கையின் விதியை மீறி சில உயிரினங்கள் உள்ளன. இந்த தனித்துவமான உயிரினங்கள் தண்ணீர் அதிகமாக இருக்கும் சூழலில் வாழ்ந்தாலும், தண்ணீரைக் குடிப்பதில்லை. இது எப்படி சாத்தியம்? வாருங்கள் இந்தப் பதிவில் அத்தகைய உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தவளை: தவளைகள் நீரில் வாழ்ந்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிப்பதில்லை. இயற்கையின் படைப்பில் நிறைய அதிசயங்கள் உள்ளன. தவளை தன் வாழ்நாள் முழுவதும் நீரிலேயே கழித்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிப்பதில்லை என்பது வியப்பாக உள்ளது. தவளையின் தோல் ஈரப்பதம் வாய்ந்தது. அது தன் தோல் மூலம் தனக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்வதால் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. தவளைகளால் வறண்ட அல்லது வெப்பமான சூழலிலும் உயிர் வாழ முடிவதற்கு காரணம் அவை தன் தோலில் தண்ணீரை சேமிப்பு வைப்பதே. சில தவளைகள் சிறுநீர் பையிலும் சிறுநீரக திசுக்களிலும் நீரை சேமித்து வைக்கின்றன.
ஆடக்ஸ் மான்: ஆடக்ஸ் என்கிற ஒரு வகை மான் சஹாரா பாலைவனத்தில் காணப்படுகிறது. தாவரங்களில் உள்ள பனித்துளிகளில் இருந்தும், அடர்த்தியற்ற தாவரங்களிலிருந்தும் தனக்குத் தேவையான நீரை எடுத்துக் கொள்கிறது. இவற்றிற்கு தேவையான பெரும்பாலான தண்ணீர் இதன் உடலிலேயே மூச்சுக்காற்றின் துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது.
கங்காரு எலி: வட அமெரிக்காவில் மணற்பாங்கான இடங்களில் காணப்படும் கங்காரு எலிகள் பசுமையான சாறு நிரம்பிய செடிகளை உணவாக உட்கொள்கிறது. இவை தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமலே வாழ்கிறன. மணற்பாங்கான இடங்களில் மணலில் ஒரு அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதில் வாழ்கின்றன. இது தன் வலையின் வாசலைக் கூட கள்ளிச் செடிகளின் துண்டுகளைக் கொண்டு அடைத்து வைத்துக் கொள்ளும். இதனால் வளையின் ஈரம் பாதுகாக்கப்படுகிறது. இந்த எலிகள் எப்போதும் வியர்வையை வெளியிடுவதில்லை. இதன் சிறுநீரகங்கள் உடலின் கழிவை வெளியேற்ற மிகக் குறைந்த அளவு நிறையே பயன்படுத்துகிறது.
டால்பின்: நீர் வாழ் உயிரினமான டால்பின் நீரில் வாழ்ந்தாலும் தண்ணீரை குடிப்பதில்லை. நீர் அருந்தாத நீர்வாழ் உயிரினமான இது ஒரு சிறந்த பாலூட்டி சிற்றினமாகும். பாம்புகள், பல்லிகள் போன்ற பல உயிரினங்கள் தாங்கள் உண்ணும் பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களின் உடலில் உள்ள ஈரத்தை பெற்றுக் கொள்கின்றனவே தவிர தனியாக நீரை அருந்துவதில்லை.
தரை நாய்: வட அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ பகுதியில் புல்வெளியில் வாழும் எலிவகையைச் சேர்ந்த விலங்கினம் இது. இதற்கு நாய் என பெயர் இருப்பினும் நாய் இனத்திலிருந்து உருவத்திலும் வாழ்க்கை நடைமுறையிலும் முற்றிலும் மாறுபட்டது. இது ஒரு தாவர உண்ணி. இவை உண்ணும் புல்லில் உள்ள உயிர் சத்தையும் நீர்ச்சத்தையும் எடுத்துக் கொள்வதால் தண்ணீரை தேடி செல்வதில்லை.